பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் மாயமான இரு சிறுமியர், இரு சிறுவர்கள் என நால்வர், கோவையில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த 13 வயது, 11 வயது சிறுமியர் என இருவர், 8 வயது நிரம்பிய சிறுவர்கள் இருவர், நேற்றிரவு, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால், இவர்களின் பெற்றோர் வெளியில் வந்து பார்த்த போது, நால்வரும் மாயமாகி இருந்தது தெரியவந்தது. அருகில் உள்ளவர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
வீட்டின் அருகே இருக்கும் பேக்கரி முன் இவர்களை பார்த்ததாக ஒருவர் தெரிவித்ததால், அங்கு பார்த்த போதும், குழந்தைகள் இல்லை.பதட்டமடைந்த பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து, குழந்தைகளின் புகைப்படத்தை, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி, பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடினர்.
குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், 'குழந்தைகள் வழக்கமாக, வெளியில் விளையாடிக் கொண்டிருப்பர். வீட்டுக்கு வந்து விடுவர் என்று இருந்தோம். நேரம் கழித்து வரவில்லை என்றவுடன், வந்து பார்த்த போது, காணவில்லை என்பது தெரியவந்தது' என்றனர். இந்நிலையில், கோவை உக்கடம் பகுதியில் குழந்தைகள் இருந்ததை கண்ட இப்பகுதி போலீசார், குழந்தைகளை மீட்டு, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து, பெற்றோருக்கு தகவல் அளித்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE