ராமநாதபுரம்:''தமிழகத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிட, டிச., 5ல் மத்தியக் குழுவினர் வர உள்ளனர்,'' என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் கூறினார்.
ராமநாதபுரத்தில், 'புரெவி' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஆய்வு செய்த அமைச்சர் கூறியதாவது:புரெவி புயல், இலங்கையில் கரையை கடக்க துவங்கி, தொடர்ந்து, பாம்பன், கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, கடலுக்கு சென்ற மீனவர்கள், பத்திரமாக கரை திரும்பி உள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பேரிடர் மீட்பு பணிக்கு கடற்படையினர், ஹெலிகாப்டர் உதவிகளை செய்து தருவதாக, முதல்வரிடம் உறுதி கூறியுள்ளார்.
219 பகுதிகள் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக, கூடுதல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். புயல் பாதிப்புகளை பார்வையிட, டிச., 5ல் மத்தியக் குழுவினர் வர உள்ளனர். பாம்பன் பாலத்தில், கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
ராமேஸ்வரத்தில்அமைச்சர் ஆய்வு
புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், நேற்று ராமேஸ்வரத்தில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள புயல் காப்பகத்தில், உணவு பொருட்களை ஆய்வு செய்தார். பாம்பன் பாலத்தில் நின்றபடி, படகுகளை பார்வையிட்டார்.
பின், உதயகுமார் அளித்த பேட்டி:முதல்வரின் முன்னெச்சரிக்கையால், ஒக்கி, கஜா, நிவர் புயலில் இருந்து, மக்கள் பாதிப்பின்றி மீட்கப்பட்டனர். புரெவி புயலை யொட்டி, தேசிய பேரிடர் மீட்பு குழு, காவல், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளதால், மக்கள் அச்சப்பட வேண்டாம்.துாத்துக்குடி, கன்னியாகுமரியில், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற, மீனவர்கள் திரும்பி வர நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.ராமேஸ்வரம் கோவிலில், மூடி கிடக்கும் புனித தீர்த்த கிணறுகளை திறப்பது குறித்து, முதல்வரின் பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE