கோவை:'பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக, உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்' என, பாரதியார் பல்கலை துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு, தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கம் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கம் சார்பில், பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட, கலை அறிவியல் கல்லுாரிகளின் தலைவர்கள் மற்றும் செயலர்கள், துணைவேந்தர் காளிராஜை சந்தித்தனர்.இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
அரசு கல்லுாரிகள், அரசு உதவிபெறும் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் என, மூன்று பதவியையும் நியமித்துக்கொள்ள, பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) வழிகாட்டுதல்களோடு அனுமதி அளித்திருந்தது.
தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கம் சார்பில், வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, உதவி பேராசிரியர்களோடு, இணை பேராசிரியர்களையும் நியமித்துக்கொள்ள பல்கலை அனுமதியளித்தது. உதவி மற்றும் இணை பேராசிரியர்களை சுயநிதி கல்லுாரிகளில் நியமிப்பது போலவே, பேராசிரியர் பதவியையும் நியமிக்க அனுமதிக்க வேண்டும் என, சங்கம் சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்பின், சங்கத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில், 2019 ஆக., 14ல் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், கோரிக்கையை ஏற்று, எட்டு வாரங்களுக்குள் செயல்படுத்த பல்கலை பதிவாளர் மற்றும் தமிழக அரசின் தலைமை செயலருக்கு, 2020, ஜன., 23ல் உத்தரவிட்டது. ஆனால், ஒன்பது மாதங்களாகியும், இந்த உத்தரவின் மீது, இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக, பல்கலை துணைவேந்தர் காளிராஜ் மற்றும் பதிவாளர் முருகனை நேரில் சந்தித்து, உயர்நீதிமன்ற உத்தரவை தாமதிக்காமல், செயல்படுத்தக்கோரி, நினைவூட்டல் கடிதம் வழங்கினோம்.மேலும், பல்கலை ஆட்சி மன்றக் குழுவில் சுயநிதி கல்லுாரிகளின் செயலர்களின் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டி, உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, 2019, ஜூலை, 1ல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தவும், நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டது.இவ்வாறு, தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE