கடம்பத்துார்; கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டில், ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டு கிடப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வேலுார் மாவட்டம், காவேரிபாக்கம் ஏரியில் துவங்கி, தக்கோலம் வழியாக வரும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம், கேசாவரம் அணைக்கட்டு பகுதியில், கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என, இரு ஆறுகளாக பிரிகிறது.கேசாவரம் அணைக்கட்டில் நீர் நிரம்பினால், நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர், பூண்டி மற்றும் புழல் ஏரிக்கு செல்கிறது.இந்த அணைக்கட்டின் இன்னொரு புறம் அமைக்கப்பட்ட, 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் மழை நீர், கூவம் ஆறாக மாறி, பேரம்பாக்கம், மணவாள நகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக, சென்னைக்கும், செம்பரம்பாக்கம் ஏரிக்கும் செல்கிறது.இந்த கூவம் ஆற்றை நம்பி, 18,000 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஆற்றிலிருந்து, 22 கால்வாய்கள் பிரிந்து செல்கின்றன.இந்த கேசாவரம் அணைக்கட்டில், 2015ல், மழை நீர் வெள்ளமாக பாய்ந்து வந்தது. அதன் பின், நீர் வரத்து இன்றி அணைக்கட்டு வறண்டு கிடக்கிறது.இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிவர் புயலால் கன மழை பெய்து வந்தது. இதையடுத்து, பல அணைகள் நிரம்பி தண்ணீர் வழிந்தோடி வருகிறது.ஆனால், கேசாவரம் அணைக்கட்டில், ஒரு சொட்டு நீர்கூட இல்லாமல் வறண்டு கிடக்கிறது. மேலும், அணைக்கட்டு போதிய பராமரிப்பின்றி முட்புதர்கள் வளர்ந்து, புதர் மண்டிக் கிடப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, கேசாவரம் அணைக்கட்டை சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறையினர் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE