ஊத்துக்கோட்டை; ஆரணி ஆற்றில், தரைப்பாலம் உடைந்து, ஆறு நாட்களாக போக்குவரத்து பாதித்த நிலையில், காவல் துறையினர் அமைத்த பால படிக்கட்டால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
'நிவர்' புயல் காரணமாக, தமிழகம், ஆந்திர மாநிலங்களில் பெய்த மழையால், நிர்நிலைகள் நிரம்பின. பிச்சாட்டூர் அணைக்கட்டு முழுதும் நிரம்பி, உபரி நீர் வினாடிக்கு, 11 ஆயிரம் கன அடி வீதம், மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.காட்டுப் பகுதிகளில் வந்த மழை நீர் மற்றும் உபரி நீர் கலந்து, ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஐந்து ஆண்டிற்கு பின் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் இருந்த தற்காலிக தரைப்பாலம் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.இதன் காரணமாக, ஆறு நாட்களாக போக்குவரத்து பாதித்ததால், ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு செல்ல முடியாமல், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டனர்.இதனிடையே, ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேல் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள், கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தது. தரைப்பாலம் உடைந்த நிலையில், சாரங்கள், ஏணிகள் அமைத்து, ஆற்று நீரில் பொதுமக்கள் கடந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,சாரதி, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., விஜயகுமார் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேச்சு நடத்தி, நேற்று முன்தினம் மாலை, பாலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல, பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.இரவு, 10:00 மணிக்கு, பாலத்தில் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. காவல் துறையினரின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE