மணவாள நகர்; மணவாள நகர் குடியிருப்பு பகுதியில், மொபைல்போன் உயர் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருவது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாள நகர். இங்குள்ள, கபிலர் நகர் பகுதியில், 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 3,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், தனி நபர் ஒருவரது வீட்டில், மொபைல்போன் உயர் கோபுரம் அமைக்க, தனியார் மொபைல் நிறுவனம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.இதனால், ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்பால், பொதுமக்கள் கடும் அவதிப்படும் நிலை ஏற்படும் என கருதி, இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில், 2019ம் ஆண்டு, அக்டோபர் மாதம், அப்போதைய கலெக்டரிடம், குறை தீர்க்கும் நாளில், மனு அளிக்கப்பட்டது.மேலும், இதற்குண்டான நகலை, அப்போதைய திருவள்ளூர் வட்டாட்சியர், ஒன்றிய அலுவலர், மின்வாரிய உதவி பொறியாளர், கோட்ட பொறியாளர் மற்றும் துணை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது காவல்துறை ஆதரவோடு, மொபைல்போன் உயர் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருவது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மொபைல்போன் கோபுரம் அமைக்க, அனுமதி கொடுக்கவில்லை.ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி, மொபைல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், பொதுமக்கள் தற்போது புகார் அளித்தால், ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.எனவே, கலெக்டர். குடியிருப்பு பகுதியில் மொபைல்போன் உயர் கோபுரம் அமைப்பதை ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE