காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,200 ஆண்டுகள் பழமையான, கம்ப கால்வாயால், 85 ஏரிகள் நிரம்பியுள்ளன. ஆறுகள் இல்லாத பல ஏரிகள் நிரம்புவதற்கு, இந்த கால்வாய் வரப்பிரசாதமாக உள்ளதாக, விவசாயிகள் கூறினர்.தமிழகத்தில், அதிக நீர்நிலைகள் உடைய மாவட்டமாக, காஞ்சிபுரம் விளங்குகிறது. ஆண்டுதோறும் பெய்யும் வடகிழக்கு பருவ மழைக்கு, பெரும்பாலான ஏரிகள் நிரம்பிவிடும்.அந்த வகையில், 'நிவர்' புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆறு, கால்வாய் மற்றும் ஏரிகளில், நீர்வரத்து துவங்கியுள்ளது.இதனால், மாவட்டத்தில், 100க்கும் அதிகமான ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில், 85 ஏரிகள், கம்ப கால்வாய் மூலம் மட்டுமே நிரம்பியுள்ளன.இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:வேலுார் மாவட்ட பாலாறு அணைக்கட்டு அருகே, கூண்மடை என்ற பகுதியில், இரு கால்வாய்கள் பிரிகின்றன. ஒன்று, காவேரிப்பாக்கம் ஏரிக்கும், மற்றொன்று கோவிந்தவாடி கால்வாயாகவும் பிரிகிறது.கோவிந்தவாடி கால்வாய், காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் பாய்ந்து, தைப்பாக்கம் என்ற இடத்தில் இரண்டாக பிரிகிறது. இங்கு துவங்கும் கம்ப கால்வாய், 44.36 கி.மீ., சென்று, ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடைகிறது.கோவிந்தவாடி கால்வாய், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்ப, திருமால்பூர் வழியாக செல்கிறது. கம்ப கால்வாய், காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களில் உள்ள ஏரிகளில் பாய்கிறது.பாலாற்றில் தண்ணீர் வந்தால் மட்டுமே, கம்ப கால்வாயில் தண்ணீர் செல்லும். 2015ல் பெய்த பெருமழை காரணமாக, இக்கால்வாயில் தண்ணீர் சென்றது. சமீபத்திய பருவ மழையால், வேலுார் மாவட்ட பாலாறில் இருந்து தண்ணீர் வருகிறது.இந்த கால்வாய் மூலம், காஞ்சிபுரம் தாலுகாவில், 55 ஏரிகள் நிரம்பியுள்ளன. இவற்றில் இருந்து, 15 ஆயிரத்து, 105 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்கு உட்பட்ட, 30 ஏரிகள் நிரம்பி, 7,130 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. பழம்பெரும், கம்ப கால்வாய், விவசாயத்திற்கு முழுமையாக பயன்படுகிறது; வரப்பிரசாதமாகவும் விளங்குகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.1,200 ஆண்டுகள் பழமை!கி.பி., 814 -- 850ம் ஆண்டுகளில், தென்னிந்தியாவில் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தை போக்க, ஆங்காங்கே குளம், கால்வாய்கள் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பாலாற்றிலிருந்து, பூதன் ஏரி - ஸ்ரீபெரும்புதுார் ஏரி - திருமங்கலம், மாம்பாக்கம் ஆகிய ஏரிகளை இணைக்கும் வகையிலான கால்வாயை, கம்ப வர்ம பல்லவன் வெட்டியதாக தெரிகிறது.ஆற்று நீர் செல்லாத இடங்களாக, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களில் உள்ள ஏரிகளை நிரப்ப, 1,200 ஆண்டுகளுக்கு முன், பல்லவ அரசர் காலத்தில் கம்ப கால்வாய் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.கடந்த, 1592ல், கால்வாய் ஆழப்படுத்தப்பட்டு, அதன் கரைகளை உயர்த்தும் பணியை, விஜயநகர அரசர் வெங்கடபதிராயர் மேற்கொண்டார். அதன்பின், ஆங்கிலேயர்கள் இந்த கால்வாயை சீரமைத்து பயன்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE