சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், அதி நவீன தொழில்நுட்ப முறையில், இரண்டாவது முறையாக, கிருமி நாசினி நேற்று தெளிக்கப்பட்டது. இந்த கிருமி நாசினி அடுத்த, 60 நாட்களுக்கு, அனைத்து வகையான வைரஸ்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.கொரோனா தொற்று காரணமாக, மார்ச் மாத இறுதியில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டது.ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், கடந்த செப்டம்பர் முதல் வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.வடபழநி ஆண்டவர் கோவிலில், பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால், பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி, கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.அதன் ஒரு பகுதியாக, 'நானோ' தொழில்நுட்பம் மூலம், உலக தரம் வாய்ந்த அதிநவீன சுத்தப்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது.அதன்படி, 'அபோ அண்டு பியான்டு' என்ற நிறுவனம் மூலம், வடபழநி ஆண்டவர் கோவில் முழுதும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள இந்த தொழில்நுட்பமானது, கொரோனா வைரஸ் உள்ளிட்ட அனைத்து வைரசுகளையும் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டது.இந்த கிருமி நாசினி, கோவில் மதில்சுவர், நுழைவாயில், பக்தர்கள் வரிசை கைப்பிடி, அலுவலகம், துாண்கள் என, கோவில் முழுதும் தெளிக்கப்பட்டது.இந்த தொழில்நுட்ப முறை, ஆல்கஹால், நச்சுத்தன்மை அற்றது. வாசனை, நெடியும் கிடையாது. சிறார்கள், மூத்த குடிமக்கள் என, எவருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படாது.ஒருமுறை கிருமி நாசினி தெளித்தால், அடுத்த, 60 நாட்களுக்கு தொடர் பாதுகாப்பு அளிக்கும் உத்தரவாதம் உள்ளது.பக்தர்களுக்கு மிகவும் பாதுகாப்பு அளிக்கும் இந்த வகை கிருமி நாசினி, இரண்டாவது முறையாக வடபழநி ஆண்டவர் கோவிலில், நேற்று தெளிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE