மதுரை : மதுரை மாவட்டம்சாப்டூர் போலீஸ் விசாரணைக்குச் சென்றவர் தற்கொலை செய்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டி சந்தோஷ் தாக்கல் செய்த மனு:எனது சகோதரர் இதயக்கனி ஒரு பெண்ணை திருமணம் செய்தார். பெண்ணின் குடும்பத்தினர் சாப்டூர் போலீசில் புகார் செய்தனர். எஸ்.ஐ.,ஜெயக்கண்ணன் மற்றும் சில போலீசார் எங்கள் குடும்பத்தினரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தினர். விசாரணைக்குச் சென்ற சகோதரர் ரமேஷ் செப்.,17ல், வீட்டின் அருகே மலையிலுள்ள மரத்தில் துாக்கில் பிணமாக தொங்கினார்.
போலீசாரின் துன்புறுத்தலால் ரமேஷ் இறந்துள்ளதாக சந்தேகிக்கிறோம். அவர் தற்கொலை செய்ததாகக்கூறி போலீசார் தப்பிக்க முயற்சிக்கின்றனர். சம்பவத்தை தொடர்ந்து எஸ்.ஐ.,க்கள் ஜெயக்கண்ணன், பரமசிவம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அவசரகதியில் பிரேத பரிசோதனை நடந்தது. விதிகளை பின்பற்றவில்லை. மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு சந்தோஷ் மனு செய்தார்.
ஏற்கனவே நீதிபதி, 'அணைக்கரைப்பட்டியில் அடக்கம் செய்யப்பட்ட ரமேஷ் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதில் சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் இறந்த தந்தை, மகனை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவை ஈடுபடுத்த வேண்டும்,' என்றார். அதனடிப்படையில் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.நேற்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'இதில் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்ற முகாந்திரம் உள்ளது. இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்படுகிறது,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE