நியூயார்க்: ''இரண்டு உலகப் போர்களைப் போல, தற்போது பயங்கரவாதம் மூலம் போர் நடத்தப்படுகிறது,'' என, ஐ.நா.,விற்கான, இந்தியாவின் நிரந்தர துாதுக் குழுவின், முதன்மை செயலர், ஆஷிஷ் சர்மா எச்சரித்து உள்ளார்.
அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா., தலைமையகத்தில், இரண்டாம் உலகப் போரின், 75வது ஆண்டையொட்டி, போரில் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில், ஆஷிஷ் சர்மா பங்கேற்று பேசியதாவது: தற்போது, ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் வழிகளில் ஒன்றாக, பயங்கரவாதம் உருவெடுத்துள்ளது. இரண்டு உலகப் போர்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.அதுபோன்ற படுகொலைகள், பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்படுகின்றன. இது, உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
பயங்கரவாதத்தை, உலக நாடுகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்தியா, காலனி ஆதிக்கத்தில் இருந்த போதும், இரண்டாம் உலகப் போரில், 25 லட்சம் வீரர்களை அனுப்பியது. அவர்கள், வடக்கு ஆப்ரிக்கா முதல் ஐரோப்பா வரையும், கிழக்கில், ஹாங்காங்கிலும் போரிட்டுள்ளனர்.

உயிர் தியாகம்
அதில், 87 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். அவர்களின் தியாகத்தை மறக்க முடியாது. அதுபோல, காலனி ஆதிக்கத்தில் இருந்த போதும், கூட்டு நாடுகளின் சுதந்திரத்திற்காக, ஆசிய, ஆப்ரிக்க, அரபு நாடுகளின் சகோதரர்கள் போரிட்டு, உயிர் தியாகம் செய்ததும் நம் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். இரு உலகப் போர்களை பற்றி, ஏராளமான ஐரோப்பிய நாவல்கள், வரலாற்று புதினங்கள், திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால், காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில், போர் வீரர்கள் செய்த தியாகம் அந்த அளவிற்கு பிரபலப்படுத்தப்பட வில்லை என்பது வருத்தத்திற்குரியது. இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE