சென்னை: புரெவி புயலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
வங்க கடலில் கடந்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி உருவான புரெவி புயல் நேற்று(டிச.,02) இலங்கையை கடந்த நிலையில், இன்று (டிச., 03) மன்னார் வளைகுடா பகுதியை கடந்து தமிழக கடலோர பகுதிகளை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புயல் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திரிகோணமலையில் கரையை கடந்த இந்த புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கிறது.

புரெவி புயலின் தாக்கம் காரணமாக, பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், தூத்துக்குடி, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், நுங்கம்பாக்கம், திருவான்மியூர், அடையாறு, வேளச்சேரி, பாரிமுனை, ராயபுரம், மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
மழை அளவு
வேதாரண்யத்தில் 19 செ.மீ. தலைஞாயிறில் 14 செ.மீ. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ., குடவாசலில் 10 செ.மீ., திருவாரூரில் 9 செ.மீ., நன்னிலத்தில் 8 செ.மீ. மழை பதிவானது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 12 செ.மீ., தங்கச்சிமடத்தில் 8 செ.மீ., பாம்பனில் 6 செ.மீ. மழை பதிவானது.
தெற்கு அந்தமான் பகுதிகளில் நாளை (டிச.4) மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விமானங்கள் ரத்து
புரெவி புயல் காரணமாக சென்னையில் இருந்து பகல் ஒரு மணிக்கு தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய விமானமும்
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு மாலை 4.50 மணிக்கு வரவேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து பகல் 11.30 மணிக்கு கொச்சி செல்லும் விமானமும், பிற்பகல் 2.35 மணிக்கு கொச்சியிலிருந்து சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து நேற்று இரவு 8.35 மணிக்கு திருச்சி செல்ல வேண்டிய விமானம், திருச்சியில் இருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE