சத்தியமங்கலம்: அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், கறுப்பு கொண்டை கடலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சத்தியில் ரேஷன் கடையை பெண்கள் முற்றுகையிட்டனர்.
சத்தியமங்கலம், அண்ணாநகரில் ரேஷன் கடை உள்ளது. அந்தியோதயா கார்டுதாரருக்கு தலா, 5 கிலோ கறுப்பு கொண்டை கடலை வழங்க அரசு உத்தரவிட்டது. நேற்று காலை ரேஷன் கடைக்கு, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பொருட்கள் வாங்க வந்தனர். அவர்கள், கொண்டை கடலை கேட்டனர். குறிப்பிட்ட கார்டுகளுக்கு மட்டும்தான், வினியோகம் செய்ய முடியும் என, விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். ஆவேசமடைந்த பெண்கள், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்க வேண்டுமென கூறி, ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். சத்தியமங்கலம் போலீசார், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூறுகையில், 'வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பி.ஹெச்.ஹெச்., என்ற எழுத்து உள்ள கார்டுகளுக்கு மட்டும், கொண்டை கடலை வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இக்கடையில், 233 கார்டுகளுக்கு வழங்கப்படும். என்.பி.ஹெச்.ஹெச்., என்ற எழுத்து உள்ள கார்டுகளுக்கு வழங்கப்படமாட்டாது; துவரம் பருப்பு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படும்' என்றனர். விளக்கத்தை ஏற்ற பெண்கள், மற்ற பொருட்களை வாங்கி கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE