ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், ஜெயகோபால் வீதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சிலர் உண்ணாவிரத போராட்டம் இருந்த நிலையில், கடையை திறக்க கோரி, மது பிரியர்கள் கடை முன் அமர்ந்து கோஷமிட்டனர். ஈரோடு, ஜெயகோபால் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில், எந்நேரமும் அடிதடி, தகராறு ஏற்படுகிறது. இந்நிலையில், கடையை மூடக்கோரி, தமிழர் கழகம் கட்சி சார்பில், நேற்று மாவட்ட செயலாளர் குணசேகரன் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இக்கடையால் இப்பகுதியில் தகராறு, கொலை, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுவதாக கூறி, போராட்டத்தை தொடர்ந்தனர். அந்தியூருக்கு முதல்வர் வந்ததால், அங்கு பாதுகாப்பு பணிக்கு டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சென்றதால், போராட்டத்தை நிறுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை. இதற்கிடையில், மூன்று நாட்களுக்கு முன்பு, இக்கடை முன் ஒரு கொலை முயற்சி நடந்ததால், கடை திறக்கவில்லை. இதனால் மதியம், 11:30 மணி முதல், பெண்கள் உட்பட மது பிரியர்கள் கடை முன் கூடி, 'கடையை உடனே திறக்க வேண்டும். மது விற்பனை செய்ய வேண்டும். உழைப்பவர்களுக்கு மது வேண்டும்' என, கோஷமிட்டனர். குறைந்தளவே போலீசார் இருந்ததால், கண்டு கொள்ளவில்லை. மதியம், 1:00 மணிக்குப்பின், கடை திறக்காததால் மது பிரியர்கள் வேறு கடையை நோக்கி நகர்ந்தனர். உண்ணாவிரதம் நடத்தியவர்களிடம், இன்ஸ்பெக்டர் கோபிநாத் மதியம், 1:20 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி, 'கோரிக்கை குறித்து கலெக்டருக்கு பரிந்துரைப்பதாக' உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE