மொடக்குறிச்சி: ''தமிழகத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது,'' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசினார்.
தி.மு.க., சார்பில், 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற நிகழ்ச்சி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட, துய்யம் பூந்துறை பஞ்சாயத்து, அரச்சலூர், சிவகிரி, மொடக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் நேற்று நடந்தது. ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, மேற்கு ஒன்றிய தலைவர் குணசேகரன் தலைமை வகித்தனர்.
இக்கூட்டத்தில், எம்.பி., கனிமொழி பேசியதாவது: ஐந்து மாதங்களில், அ.தி.மு.க., ஆட்சி அகற்றப்பட்டு, ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., ஆட்சி மலரும். முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்குவது இல்லை. உதவித்தொகைகள் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கிடைப்பதில்லை. முதல்வர் மாவட்டத்திற்கு மட்டும், எட்டு வழிச்சாலை, நான்கு வழிச்சாலை என, பல்வேறு சாலை வசதிகளை உருவாக்கி வருகிறார். தமிழகத்தில் அனைத்து உரிமைகளும், மத்திய அரசால் தட்டி பறிக்கப்படுகின்றன. அதை எதிர்த்து போராட தமிழக முதல்வருக்கு துணிச்சல் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில், பல்வேறு சந்தேகங்கள் உள்ள நிலையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, ஒன்பது முறை கால அவகாசம் கேட்டு, விசாரணை நீண்டு கொண்டே செல்கிறது. தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம், விசாரணைக்கு முன் ஆஜராகாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கி விடுகிறார். ஐந்து மாதம் பொறுங்கள். தி.மு.க., ஆட்சியில் அனைவருக்கும், அனைத்தும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE