ஆத்தூர்: குடிமராமத்து பணியால், 16 ஆண்டுக்கு பின், பாப்பான் ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆத்தூர், அப்பமசமுத்திரம், பாப்பான் ஏரிக்கு செல்லும் வாய்க்கால், முட்புதரால் தூர்ந்ததால், தண்ணீர் வரத்து இல்லை. குடிமராமத்து திட்டத்தில், 30 லட்சம் ரூபாயில், கால்வாய், ஏரி தூர் எடுத்து சீரமைப்பு பணி மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த ஜூனில், அப்பணி தொடங்கி, தற்போது, நிறைவடையும் நிலையில் உள்ளது. இப்பணியால், பருவமழையின்போது, நீர்வரத்து அதிகரித்து, 16 ஆண்டுக்கு பின், ஏரி முழுமையாக நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், தென்னங்குடிபாளையம், அய்யனார் கோவில், கல்லாநத்தம் ஏரிகளுக்கு செல்கிறது. தவிர, ஏரி பகுதியொட்டி உள்ள விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ஆத்தூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மாணிக்கம் கூறுகையில், ''ஏரி நிரம்பி, கடந்த அக்., 26 முதல், உபரிநீர் வெளியேறுகிறது. வாய்க்கால் மூலம், 266 ஏக்கர் நேரடி பாசனம், ஏரியை சுற்றி, 3 கி.மீ., தூரத்துக்கு விவசாய கிணறு நீர்மட்டம் உயர்ந்துள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE