ஓசூர்: ஓசூரிலுள்ள, தனியார் சிகரெட் நிறுவன மனிதவள மேம்பாட்டு மேலாளரை, மர்ம கும்பல் கத்தி முனையில், காரில் கடத்தி சென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பீட்டர் லூயிஸ், 45; ஓசூரில் இயங்கும், ஐ.டி.சி., சிகரெட் நிறுவனத்தில், மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை நிறுவனத்துக்கு சென்ற அவர், மாலையில், மாருதி ஸ்விப்ட் டிசைர் காரில் வீடு திரும்பினார். ஓசூர் தர்கா, தேசிய நெடுஞ்சாலையிலுள்ள, முத்து மாரியம்மன் கோவில் பின்புறம், நேற்று மாலை, 6:00 மணிக்கு, மர்ம கும்பல் ஒன்று அவரது காரை மறித்து, கத்தி முனையில் தகராறு செய்தனர். அப்போது, ஐ.டி.சி., நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை உதவி அதிகாரியான கவுரி என்பவர் அவ்வழியாக வந்தார். அங்கு, பீட்டர் லூயிஸிடம் சிலர் தகராறு செய்து கொண்டிருப்பதை கவனித்தார். அப்?போது, பீட்டர் லூயிஸ் சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை காப்பாற்ற, கவுரி முயன்றார். அதற்குள் மர்ம கும்பல், பீட்டர் லூயிஸை அவரது காரிலேயே கடத்திச் சென்றது. பீட்டர் லூயிஸ் மனைவி சுகன்யா பிரின்சி, 40, புகாரின்படி வழக்குப்பதிவு செய்த, சிப்காட் போலீசார், சம்பவம் நடந்த பகுதியிலுள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், எதற்காக கடத்தப்பட்டார் எனவும் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE