ஓசூர்: ஓசூர், உழவர் சந்தையை திறக்க, விவசாயிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் சார்பில், ஆர்.டி.ஓ.,விடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், கடந்த மார்ச், 27ல், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு உழவர் சந்தை மூடப்பட்டது. இதனால், ஓசூர், ராமநாயக்கன் ஏரிக்கரை மற்றும் நகரின் பல இடங்களில் சாலையோரம், விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்று வருகின்றனர். தற்போது, கொரோனா பரவல் குறைந்துள்ளதால், ஓசூர், உழவர் சந்தையை திறக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் உழவர் சந்தை அருகே, சாலையோர கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை உழவர் சந்தை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஓசூர், உழவர் சந்தையை திறக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் சார்பில், ஓசூர், ஆர்.டி.ஓ., குணசேகரனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அவர், உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE