ஈரோடு: ''கொரோனோ காலத்தில் முக கவசம், பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது,'' என, ஈரோட்டில், தி.மு.க.,- எம்.பி., கனிமொழி பேசினார்.
'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தேர்தல் பிரசாரத்தை, எம்.பி. கனிமொழி நேற்று ஈரோட்டில் துவக்கினார். திண்டலில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு சென்று, அங்குள்ள குழந்தைகளுடன் பேசினார். பின்னர் அவர்களுக்கு உணவு வழங்கினார். சேனாபதி பாளையத்தில், பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
பின் அவர் பேசியதாவது: தி.மு.க., எதிர்கட்சியாக தான் உள்ளது. ஆனாலும், செல்லும் இடங்களில் எல்லாம், மனுக்களை கொடுத்து குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என, மக்கள் கேட்கின்றனர். 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க., ஆட்சியில் வேலைவாய்ப்பு இல்லை. அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. தி.மு.க.,வில் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள், தற்போது செயல்படாமல் உள்ளன. கொரோனோ காலத்தில், சிகிச்சை அளித்ததாக பொய் கணக்கு எழுதி ஊழல் செய்துள்ளனர். முக கவசம், பிளீச்சிங் பவுடர் வாங்கியது வரை ஊழல் நடந்துள்ளது. சாய கழிவுகளால், ஈரோடு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க., ஆட்சியில் சாய கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதற்கு பின், அ.தி.மு.க., ஆட்சியில் இந்த திட்டம் கைவிடப்பட்டது. தன்னை விவசாயி என கூறிக்கொண்டு விவசாயிகளை, முதல்வர் ஏமாற்றி வருகிறார். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி உடனிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE