சேலம்: தமிழகத்தில், 80 சதவீத ஆம்னி பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் உதவாததால், தொழிலாளர் வேலை இழந்து தவிப்பதாக, உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.
தமிழகத்தில், கடந்த பிப்ரவரி வரை, மாநில அரசின் அனுமதி பெற்ற ஆம்னி பஸ்கள், 998, தேசிய அனுமதி பெற்ற, 430, அண்டை மாநில அனுமதி பெற்ற, 1,572 என, 3,000 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. இவை தவிர, ஆம்னி பஸ் போர்வையில், 800க்கும் மேற்பட்ட சுற்றுலா பஸ்களும் இயங்கின. இந்த பஸ்களின் இயக்கம், கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கால், கடந்த மார்ச் இறுதியில் நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வால், செப்டம்பரில் அரசு பஸ்கள், அக்டோபர் முதல், தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், ஆம்னி பஸ்களின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும், 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், பஸ்களின் இயக்கத்தை இன்னும் தொடங்கவில்லை. குறைந்த பஸ்களை கொண்டுள்ள நிறுவனங்கள் மூலம், 20 சதவீத பஸ்கள் மட்டும் இயங்குகின்றன.
இதுகுறித்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது: சமுக இடைவெளி, குறைந்த பயணியருடன் பஸ்களை இயக்க அரசு நிர்ப்பந்திப்பது, வங்கிகளில் பஸ்களுக்கு செலுத்த வேண்டிய தவணை தொகைக்கு வட்டிக்கு வட்டி போடும் முடிவு ஆகியவற்றால், உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள், ஓடாத பஸ்சுக்கு காலாண்டு வரி, சாலை வரி, இன்சூரன்ஸ் செலுத்துவதில், விதிவிலக்கு வழங்கவில்லை. உயர்நீதிமன்றத்தில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தொடுத்த வழக்கு விசாரணையை, மத்திய, மாநில அரசுகள் இழுத்தடிக்காமல், உடனே தீர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும். நீதிமன்றமும், எங்களுக்கு நீதி வழங்கும் என நம்புகிறோம். இதனால், தற்போதைக்கு ஆம்னி பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளோம். இதனால், ஏராளமான தொழிலாளர், வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE