சேலம்: ஊர்க்காவல் படையில் சேர பெண்கள் தயக்கம் காட்டுவதால், அவர்களுக்கு சலுகை வழங்கி, பலரை இணைய வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீசாருக்கு உதவ, தமிழகம் முழுதும், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். தற்போது, 17 ஆயிரம் பேர் மட்டும் பணியில் உள்ள நிலையில், 5,000 பணியிடம் காலியாக உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், காலி இடங்களை நிரப்ப, எஸ்.பி., போலீஸ் கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, கடந்த நவ., 10ல் தொடங்கி, நேற்று வரை, பல்வேறு மாவட்டங்கள், மாநகரங்களில், ஊர்க்காவல் படையினருக்கு தேர்வு நடந்தது. அதில், ஏராளமான ஆண்கள் பங்கேற்ற நிலையில், அதில், 10ல் ஒரு பங்கு அளவுக்கே பெண்கள் பங்கேற்றனர். குறிப்பாக, சேலம் மாநகரில் நடந்த தேர்வில், 128 ஆண்கள் பங்கேற்ற நிலையில், பெண்கள், 10 பேர் மட்டும் கலந்து கொண்டனர். அதேபோல், அனைத்து இடங்களில் நடந்த தேர்வில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தது. இதற்கு, பெண்களுக்கு சலுகை வழங்காததே காரணம் என, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, டி.எஸ்.பி.,க்கள் கூறியதாவது: ஊர்க்காவல் படையினருக்கு, மாதம், 10 நாள் மட்டும் பணி வழங்கப்படுகிறது. அந்த நாட்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டும். குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் பணி ஒதுக்குவதை தவிர்க்க வேண்டும். அழைத்த நேரத்துக்கு பணிக்கு வர, அதிகாரிகள் தொந்தரவு செய்வதை கைவிட வேண்டும். ஊர்க்காவல் படையில் பணிபுரியும் பெண்களுக்கு, போலீஸ் தேர்வில் சலுகை வழங்க வேண்டும். அப்போது, ஏராளமானோர் ஆர்வத்துடன் இணைவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE