மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, இரண்டாம் கட்டமாக ஆர்ப்பாட்டம் நடந்தது. மல்லசமுத்திரம் சின்னஏரியில் இருந்து, மாமரப்பட்டி ஏரிக்கு கடந்த பல ஆண்டுகளாக வாய்க்கால் வழியாக செல்லும் உபரிநீரை, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமித்து, மல்லசமுத்திரத்தில் மின்மயானம் கட்டிவிட்டனர். மேலும், தண்ணீர் செல்லும் பாதையை வேறு திசைக்கு மாற்றி, வையப்பமலை சாலை வழியாக, பொன்னியாற்றிற்கு செல்லும்படி மாற்றிவிட்டனர். இதனால், மாமரப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல், கிணறுகள், போர்வெல்கள், குளம், குட்டைகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, தற்போது, பொன்னியாற்றிற்கு அதிகளவில் உபரிநீர் செல்வதால், வையப்பமலை சாலையில் இரண்டு கி.மீ., தொலைவிற்கு சாலையில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமப்படுகின்றனர். சாலை நாளுக்கு நாள் மோசமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளன. இது சம்பந்தமாக, கடந்த நவ.,18ல் மின் மயானம் முன், விவசாயிகள், மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று காலை, விவசாயிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். செயல் அலுவலர் தனபால் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE