சென்னை: நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம். சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜன., மாதம் கட்சி துவக்கப்போவதாகவும், இதற்கான தேதி டிச.,31ல் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூறியதாவது:
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
ரஜினி கட்சி துவங்குவதை வரவேற்கிறேன். அவரது வரவு நல்வரவாகட்டும். அரசியலில் எதுவும் நடக்கலாம். வருங்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது

அமைச்சர் ஜெயக்குமார்
ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுக ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பு இல்லை. ஊழல் என ரஜினி கூறுவது திமுகவை தான். கட்சி ஆரம்பிப்பது அவரவர் உரிமை
செ.கு.தமிழரசன்
எம்ஜிஆருக்கு பின், பட்டி தொட்டியெல்லாம் அனைவராலும் நேசிக்க படுபவராக, விரும்ப்படுபவராக ரஜினி உள்ளார். ஜன., முதல் அரசியல் பயணத்தை துவங்க போவதாக அறிவித்துள்ளார். எதிர்பார்த்தது ஒன்றுதான். இதனால், அரசியல் முதிர்ச்சி, அரசியல் களத்தில் மாற்றம், புதிய பாதை உருவாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன்
இந்திய குடிமகன் என்ற முறையில் கட்சி துவங்குவதோ, சேர்வதோ அவரவர் உரிமை. இதனை தவறு என சொல்லக்கூடாது. அவர் ஸ்டண்ட் படங்களுக்கு உள்ள வரவேற்பு, தெய்வீக படங்களுக்கு இல்லை. இருக்கிற அரசியல் கட்சிகளில் இல்லாத கொள்கையை அவர் என்ன சொல்ல போகிறார் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். அரசியலில் நுழைந்திருப்பதை வரவேற்கிறேன். அவர் கொள்கை, என்ன திட்டம் வகுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன்
ஆன்மிகத்திற்கு என்ன வரையறை வைத்திருக்கிறார் என தெரியவில்லை. ஆன்மிகம் வேறு அரசியல் வேறு; இரண்டையும் ஒன்றிணைப்பது குழப்பமான முயற்சி.ஆன்மிகம் ஜாதி, மதத்துடன் தொடர்புடையது. ரஜினியின் திட்டம் என்ன என தெரியவில்லை.
ஆடிட்டர் குருமூர்த்தி
தலைவர்களுக்கு வெற்றிடம் உள்ள சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவது சரியான தருணம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE