புதுடில்லி: விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக கூறிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதினை மத்திய அரசிடம் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டில்லியில் 8வது நாளாக போராடி வருகின்றனர். இதனால், மத்திய அரசு சார்பில் விவசாய சங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்றும் பேச்சுவார்த்தை நடத்த 35க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதினை அரசுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளார். விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது என கூறிய அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விருது தனக்கு வேண்டாம் என கூறியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம், பாதலுக்கு நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.