சேலம்: அறிக்கை விடுவது மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் பட்டமே தரலாம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணி மற்றும் கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வீட்டிலேயே இருந்து கொண்டு அதிமுக ஆட்சியில் ஊழல், ஊழல் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். எதிர்க்கட்சி தலைவருக்கு தினந்தோறும் அறிக்கை விடுவது மட்டுமே வாடிக்கை. அவருக்கு அறிக்கை நாயகன் என்று பட்டமே தரலாம்.

தமிழகத்தின் நிதிநிலை அளவுக்கு 2ஜி-யில் திமுக ஊழல் செய்துள்ளது. 2ஜி அலைக்கற்றையில் ரூ.1.76 லட்சம் கோடிக்கு ஊழல் செய்துவிட்டு, ஆளும் அதிமுக அரசு மீது ஸ்டாலின் வீண் பழி சுமத்துகிறார். எனது உறவினர்களுக்கு டெண்டரை விட்டுக் கொடுத்ததாக ஸ்டாலின் குறைகூறி வருகிறார். ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில்தான் அதிக விலைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. உலக வங்கியின் வழிகாட்டுதல்படி டெண்டர்கள் ஆன்லைன் மூலம் வெளிப்படையாக விடப்படுகின்றன. டெண்டர் விடுவதில் இதுவரையில் எந்த முறைகேடும் நடைபெறுவில்லை. ஆன்லைன் டெண்டரில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளை காப்பது வேளாண் சட்டங்கள். தேவையில்லையெனில் விற்பனை ஒப்பந்தத்தில் இருந்து விவசாயிகள் விலகிக் கொள்ளலாம். தமிழகத்தில் விளையும் விளைபொருள்களை விவசாயிகள் நாட்டின் எங்குவேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்ய புதிய வேளாண் சட்டங்கள் வழிவகுக்கும். வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு? பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால், மெய் திரு திருன்னு முழிக்குமாம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE