பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி: நாங்கள், வன்முறைக்கு எதிரானவர்கள். வன்னியர் சமுதாயம், வன்முறை செய்பவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவது தவறு. தொண்டர்கள் மீது ஒரு வழக்கு கூட இருக்க கூடாது என சொல்லி வருகிறோம். ரயில் மீது கல் எறிந்த சம்பவத்தில், யாரோ செய்ததை வைத்து, இந்த சமுதாயம், கட்சி செய்து விட்டதாக கூறக் கூடாது.
டவுட் தனபாலு: பழி ஓரிடம்; பாவம் ஓரிடம்னு சொல்றீங்க... ஆனா, போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, உங்க தந்தை விடுத்த அழைப்புலயே, 'நம்ம போராட்டத்தால, தமிழகமே ஸ்தம்பிக்கணும்'னு தானே சொல்லியிருந்தார்... ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம்... உங்க கட்சிக்கு ஓட்டு போடலாம்னு இருந்த ஒரு சிலர் கூட, இந்த வன்முறையை பார்த்துட்டு, அந்த எண்ணத்தை தலைமுழுகிடுவாங்க... இதுல, 'டவுட்'டே இல்லை!
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: எனக்கு தொழிலை விட, அரசியலில் ஆர்வம் அதிகம். அதனால் தான், தொழிலை விட்டு விட்டு, அரசியலில் நுழைந்துள்ளேன். கொரோனா காலமாக இருப்பதால், மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்வதை, சற்று தள்ளி வைத்துள்ளேன். அதற்கான தேதியை, விரைவில் அறிவிப்போம்.
டவுட் தனபாலு: உங்க அரசியல் ஆர்வத்தை பத்தி எங்களுக்கு தெரியாதா...? உங்களது விருமாண்டி படத்துக்கு, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கட்டையை குடுத்தப்ப, 'எனக்கும், அரசியலுக்கும் ரொம்ப துாரம்'னு திருவாய் மலர்ந்தவர் தானே நீங்க... 'பட வாய்ப்புகள் குறைஞ்சுடுச்சு... தட்டிக் கேட்க, கருணாநிதி, ஜெயலலிதா வேற இல்லாததால, அரசியலுக்கு வந்தேன்'னு வெளிப்படையா சொல்றதுல, உங்களுக்கு என்ன தயக்கம்கிறது தான், என்னோட, 'டவுட்!'
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி: வரும் சட்டசபை தேர்தலில், என் பங்களிப்பு முக்கியமாக இருக்கும். இம்மாதம் என் ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து, புதிய கட்சி துவங்குவது பற்றிய என் முடிவை, விரைவில் அறிவிப்பேன்.
டவுட் தனபாலு: மதுரை குலுங்க குலுங்க வலம் வந்தவர் நீங்க... 'சூப்பர் ஸ்டார்' ரஜினி படத்தின் முதல் நாள், முதல் ஷோ மாதிரி, உங்களை சுத்தி, ஒரு காலத்துல நின்ன கூட்டம், இப்ப, 'பவர் ஸ்டார்' சீனிவாசன் படத்தை பார்க்க வர்றவங்க மாதிரி குறைஞ்சிடுச்சு... இவங்களை வச்சு ஆலோசனை நடத்தி, புது கட்சி ஆரம்பிச்சு, நடக்கிற கதைய பேசினா என்னங்கிறது தான், என்னோட, 'டவுட்'
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE