ஜாதி விபரங்களை சேகரிக்கும் 'ஐபேக்' அணி!
''வட சென்னை காங்கிரஸ் பிரமுகர்களை கூண்டோடு இழுக்க, பம்பரமா வேலை பார்க்கிறாரு பா...'' என, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார், அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''வடசென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராயபுரம் மனோ, சமீபத்துல, முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து, அ.தி.மு.க.,வுல சேர்ந்தாரே... அவருக்கு, நல்ல மரியாதை தந்து, உபசரிச்சதால, ரொம்பவே உற்சாகமா
கிட்டாரு பா...
''இதனால, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை கூண்டோடு, ஆளுங்கட்சியில இணைக்க முடிவு பண்ணிட்டாரு... இதுக்கான பணிகள்ல, மனோ தீவிரமா களம் இறங்கிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''தேர்தல் நெருங்க நெருங்க, தாவல் அரசியல் நடக்குறது சகஜம் தானே...'' என்ற அண்ணாச்சி, ''அதிகாரத்தை காட்டி மிரட்டுதாருல்லா வே...'' என, வேறு விஷயத்திற்கு
மாறினார்.
''எந்தத் துறையில, யார் ஓய் இப்படி பண்றது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சென்னை உயர் நீதிமன்றம் பக்கம், எஸ்பிளனேடு பகுதியில, மின் வாரியத்தின் பிரிவு அலுவலகம் இருக்கு...
''இங்குள்ள அதிகாரி ஒருத்தர், விதிகளை மீறி மின் இணைப்பு வழங்குறது, புதிய இணைப்பிற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நபரிடம் ஆவணங்களை நேரில் எடுத்து வரச் சொல்லி, வசூல்ல ஈடுபடுறதுன்னு
இருக்காரு வே...
''இதுக்காகவே, தனியா ஒரு புரோக்கரையும் வச்சிருக்காரு... தனக்கு ஒத்துழைப்பு தராத ஊழியர்களை, அதிகாரத்தை காட்டி மிரட்டி, வேலை
வாங்குதாரு...
''அவருக்கு மேல இருக்கிற அதிகாரிகள் தட்டிக் கேட்டா, 'நீங்க, லஞ்சம் வாங்குறதா விஜிலென்ஸ்ல புகார் தந்துடுவேன்'னு மிரட்டுதாரு வே...'' என்றார் அண்ணாச்சி.
''வேலு, இப்படி வந்து உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணாவே, ''ஜாதி விபரங்களை சேகரிச்சுண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார்.
''எந்தக் கட்சியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து குடுத்துண்டு இருக்கற, 'ஐபேக்' நிறுவன ஊழியர்கள், வார்டு வாரியா போய், தி.மு.க., வட்ட நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் பணிகள் தொடர்பா, ஆலோசனை குடுக்கறா ஓய்...
''அப்ப, அந்தந்த வார்டுகள்ல நிலவுற பிரச்னைகளை கேட்கறதுடன், எந்த இடத்துல, எந்த ஜாதியினர் அதிகம் வசிக்கறா... அவா, எந்தக் கட்சிக்கு ஓட்டு போடுவா... அவா ஓட்டுகளை வாங்க நாம என்ன செய்யணும்கற மாதிரியான விபரங்களை சேகரிச்சிண்டு போறா... இதை வச்சு தான், வாக்காளர் பட்டியல் தயாரிக்கப் போறான்னு சொல்றா ஓய்...'' என்றார்,
குப்பண்ணா.
''அது சரி... கருணாநிதி, இப்படி எல்லாம் கம்பெனி ஆலோசனையைக் கேட்டா, அஞ்சு முறை முதல்வர் ஆனாரு... தன் மேலயும், தன் உழைப்பு மேலயும் நம்பிக்கை இருக்கணும் வே...'' என, முணுமுணுத்தபடியே
அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE