புதுடில்லி : நாட்டில் சிறந்த, 10 போலீஸ் ஸ்டேஷன்களுக்கான பட்டியலில் முதலிடத்தை, மணிப்பூர் மாநிலத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் பிடித்துள்ளது. தமிழகத்தின் சேலம் மாவட்டம்,சூரமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன், இரண்டாவது இடத்துக்கு தேர்வாகியுள்ளது.
மத்திய அரசு கடந்த, 2016ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், நாட்டில் சிறப்பாக செயல்படும், 10 போலீஸ் ஸ்டேஷன்களை தேர்வு செய்து, விருது வழங்கி வருகிறது.
வரையறைகள்
கடந்த ஆண்டுக்கான பட்டியலில், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம், நான்காவது இடத்தை பிடித்திருந்தது.இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான சிறந்த, 10 போலீஸ் ஸ்டேஷன்கள்பட்டியலை, மத்தியஉள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்ற, டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,க்கள் மாநாட்டில், இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தையும், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடையே, ஒரு ஆரோக்கியமான போட்டியையும், உருவாக்கும் நோக்கில் தான், பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
கடந்த, 2015ல், குஜராத் மாநிலம் கட்சில் நடந்த, டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில், இது பற்றி தெரிவித்த பிரதமர் மோடி, சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களை தேர்வு செய்வதற்கான வரையறைகளையும் அறிவித்தார்.இந்த ஆண்டு, சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களை தேர்வு செய்வது, சவாலாக இருந்தது. கொரோனா பரவல் காலத்தில், தொலை துாரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் செயல்பாடுகளை கண்டறிவதில், பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன. மொத்தம், 16 ஆயிரத்து, 671 போலீஸ் ஸ்டேஷன்களை ஆய்வு செய்து, அதில், 10 சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களை தேர்வு செய்வது எளிதல்ல. புள்ளிவிபரங்கள், நேரடி கண்காணிப்பு, பொது மக்களின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு, 10 போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டன.
தர வரிசை
சொத்துக்கள் தொடர்பான குற்றங்களை கையாளுதல், பெண்களுக்கு எதிரான குற்றம், நலிவடைந்தோருக்கு எதிரான குற்றங்கள், அடையாளம் தெரியாத உடல்கள் போன்ற குற்றங்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்ற அடிப்படையில், தரவரிசை வழங்கப்பட்டது.
மொத்தம், 19 வகையான அளவுகோல் அடிப்படையில், போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் பிரிக்கப்பட்டன.மாநிலத்துக்கு தலா மூன்று, யூனியன் பிரதேசங்களுக்கு தலா ஒன்று, டில்லிக்கு இரண்டு என, போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டன. 19 அம்சங்களை அடிப்படையாக வைத்து, 10 சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டன.
அதன்படி, நாட்டிலேயே சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக, வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், தவுபால் நகரில் உள்ள, நாங்போக் செக்மாய் போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை, தமிழகத்தின், சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனும்; மூன்றாவது இடத்தை, அருணாச்சல பிரதேச மாநிலம், சாங்லங் மாவட்டத்தில் உள்ள கர்சங் போலீஸ் ஸ்டேஷனும் பிடித்துள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
சூரமங்கலம் தேர்வானது எப்படி?
சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன், அகில இந்திய அளவில் தேர்வு பெற்றது எப்படி என்ற விபரங்கள், தற்போது வெளியாகி உள்ளன.சூரமங்கலம் ஸ்டேஷன் வளாகத்தை சுத்தமாக வைத்திருந்தது, வளாகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.பொதுமக்கள் வழங்கிய புகார் மனுக்கள் மீது உடனடியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை போன்றவற்றிலும், இந்த ஸ்டேஷன் சிறந்து விளங்கியது.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, குற்றவாளிகள் அதிக அளவில் கைது செய்யப்பட்டது, சிறுமியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்குகளில், குற்றவாளிகள் மீது பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதும், இதில் அடங்கும்.
இவற்றுக்கு எல்லாம் மேலாக, நடப்பாண்டில், 10 பேர், 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டு, தண்டணை பெற்று கொடுத்தது என்ற வகையில், இந்த ஸ்டேஷனுக்கு அகில இந்திய அளவில், இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து, ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வளர்மதி கூறியதாவது:போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வது, குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை என, அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டதால், இந்த பெருமை கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல்
1 நாங்போக் செக்மாய், தவுபால், மணிப்பூர்
2 சூரமங்கலம், சேலம்,தமிழகம்
3 கர்சங், சாங்லங், அருணாச்சல பிரதேசம்
4 ஜில்மிலி, சூரஜ்பூர்,சத்தீஸ்கர்
5 சங்கேம், தெற்கு கோவா,கோவா
6 காலிகட், வடக்கு மற்றும் மத்திய அந்தமான், அந்தமான் - நிகோபர் தீவுகள்
7 பாக்யோங், கிழக்கு சிக்கிம்,சிக்கிம்
8 கான்ட், முராதாபாத், உத்தர பிரதேசம்
9 கான்வெல், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி
10 ஜம்மிகுன்டா, கரீம்நகர், தெலுங்கானா
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE