புதுடில்லி:டாக்டர்களுக்கு சம்பளம் வழங்க, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத, டில்லி தலைமைச் செயலர் மீது, ஐ.எம்.ஏ., எனப்படும், இந்திய மருத்துவ சங்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை, உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. வடக்கு டில்லி மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ், ஆறு அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, ஏப்ரல் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், 'அரசு மருத்துவமனைகளின் டாக்டர்களுக்கு சம்பளம் வழங்க, வடக்கு டில்லி மாநகராட்சிக்கு, 8 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்க வேண்டும்' என டில்லி மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், ஐ.எம்.ஏ., தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின், அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.அதன்பின், சம்பளம் வழங்கப்படவில்லை. டில்லி உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத, டில்லி தலைமைச் செயலர் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் கூறியதாவது:இந்த விவகாரம் பற்றி, டில்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதனால் இந்த மனுவை, அங்கு தான் தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE