'உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடரை உடனடியாக கூட்டி, முக்கிய பிரச்னைகளை விரிவாக விவாதிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தால், தலைநகர் டில்லி பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அமைச்சர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். விவசாய பிரச்னைவிவசாயிகளுக்கும், அரசுக்குமான விவகாரமாக மட்டுமே, இதுவரையில் இருந்து வரும் சூழ்நிலையில், தற்போது முக்கிய அரசியல் கட்சிகளும், இதில் களம் இறங்க தயாராகி வருகின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும், பார்லிமென்ட் கூட்டத்தை உடனடியாக கூட்டி, விவசாய பிரச்னை உட்பட, அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க வேண்டுமென குரல் எழுப்பத் துவங்கிஉள்ளனர்.
லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போதைய சூழ்நிலையில், நாடெங்கும் முக்கிய பிரச்னைகள் நிலவுகின்றன. அவற்றில், விவசாயிகளின் போராட்டம் முக்கியமானது. கொரோனா தொற்று பல மாநிலங்களில், கட்டுக்கடங்காமல் உள்ளது.
உரிய பாதுகாப்பு
இதற்கான தடுப்பூசி தயாரிப்பு மற்றும் அவற்றை கொண்டு சேர்க்கும் நடைமுறைகள் உள்ளிட்ட பல விஷயங்கள், நாட்டு மக்களுக்கு, இன்னும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. பொருளாதார வீழ்ச்சியால், தொழில் துறையில் முடக்கம் ஏற்பட்டுஉள்ளது. இதன் தாக்கத்தால், வேலையின்மை பிரச்னையும், பெரிய அளவில் உருவாகியுள்ளது. சீனாஉடனான எல்லைப் பிரச்னையில், தொடர்ச்சியாக என்ன தான் நடக்கிறது என தெரியவில்லை.
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நடக்கும் ஊடுருவல்கள் உள்ளிட்ட பல விஷயங்களை, அரசு தெளிவுபடுத்த வேண்டிய நிலை எழுந்து உள்ளது.இந்த முக்கிய பிரச்னைகள் குறித்து, விரிவான வெளிப்படையான விவாதங்களை மேற்கொள்ள வேண்டிய கடமை, அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் உள்ளது.எனவே, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரை, தாமதமின்றி கூட்ட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE