மும்பை:எச்.டி.எப்.சி., வங்கியின் மின்னணு சேவைகள் அடிக்கடி முடங்குவதால், அந்த வங்கி, புதிய 'கிரெடிட் கார்டு'களை வழங்க, ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
தனியார் துறையைச் சேர்ந்த, எச்.டி.எப்.சி., வங்கியின் மின்னணு சேவைகளை விரைவாக பெற முடியாமல், வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மின்வெட்டு'கணினி மற்றும் மொபைல் போன் வாயிலாக, இணைய வழி வங்கிச் சேவைகளை சுலபமாக பெற முடியவில்லை' என, ஏராளமான புகார்கள் வங்கிக்குச் சென்றன.நவ., 21ல், ஏராளமான வாடிக்கையாளர்கள், மின்னணு வங்கிச் சேவைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
அதற்கு, 'பிரதான தகவல் மையத்தில் ஏற்படும் மின்வெட்டு தான் காரணம்' என, வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மின்னணு வங்கிச் சேவைகளில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்யும் வரை, 'கிரெடிட் கார்டு' வழங்குவது, புதிய மின்னணு சேவைகளை துவக்குவது ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, எச்.டி.எப்.சி., வங்கிக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், எச்.டி.எப்.சி., வங்கியின் இயக்குனர் குழு, மின்னணு தொழில்நுட்ப பயன்பாட்டில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்யும்படியும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
பிரச்னை
இதையடுத்து, எச்.டி.எப்.சி.,வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கியின் மின்னணு சேவைகளில், ஒரு முறை அனுப்பப்படும் கடவுச் சொல், பரிவர்த்தனைக்கான அங்கீகாரம் ஆகியவற்றை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக, வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குறைகளை சரி செய்ய, தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
சமீபத்தில், மின்னணு வங்கிச் சேவையில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இதனால், தற்போதைய கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், மின்னணு வங்கிச் சேவைகள் ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வாடிக்கையாளர்கள், வழக்கம் போல சேவைகளை பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி மீது, ரிசர்வ் வங்கி இத்தகைய தடை விதித்திருப்பது, இதுவே முதல் முறை.
மின்னணு சேவைகளில் முதலிடம்
இந்திய வங்கித் துறையில், எச்.டி.எப்.சி., வங்கி தான், மின்னணு தொழில்நுட்பத்தில் பெரும்பான்மை சேவைகளை வழங்குகிறது. இந்த வங்கியின் பரிவர்த்தனைகளில், 90 சதவீதம், கிளைகள் சாரா, மின்னணு தொழில்நுட்பத்தில் நடக்கிறது. ஜூலையில், வங்கியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் முனிஷ் மிட்டல் பதவி விலகினார். கடந்த மாதம், புதிய தலைவராக, 'கிரிசில்' நிறுவனத்தைச் சேர்ந்த, லஷ்மி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE