புதுடில்லி:கொரோனா வைரசுக்கு எதிரான, 'பைசர்' நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தற்காலிக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்தை, இந்தியாவுக்கு அளிப்பது குறித்து பேச்சு நடந்து வருவதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு உள்ளன. நம் நாட்டில், மூன்று தடுப்பூசிகள், இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. இந்நிலையில், பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை பயன்படுத்த, பிரிட்டன் அரசு தற்காலிக ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்த மருந்தை, மற்ற நாடுகளுக்கு வழங்குவது குறித்த பேச்சு துவங்கியுள்ளது.
இது தொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பிரிட்டன் அரசு தற்காலிக ஒப்புதல் அளித்துள்ளது. பிரிட்டன் அரசின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் மற்ற ஒப்புதல்களை பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கும், இந்த மருந்தை, 'சப்ளை' செய்வது குறித்து பேச்சு துவங்கியுள்ளது.
தற்போதைக்கு, வைரஸ் பாதிப்பு உள்ளதால், அரசுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படும். இதற்காக உரிய துறைகளுடன் பேச்சு நடக்கிறது. அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்வோம் என்ற எங்கள் உறுதிமொழியை நிச்சயம் நிறைவேற்றுவோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
'இன்டர்போல்' எச்சரிக்கை
தடுப்பூசியை பயன்படுத்த, பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சின் லியோன் நகரில் இருந்து செயல்படும், 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 'தடுப்பூசி கிடைக்கும்' என, இணையதளம் மூலமாக கிரிமினல் குழுக்கள் பொய்யான, போலியான விளம்பரங்களை செய்யலாம். போலி மருந்துகளையும் விற்பனை செய்யலாம். அதுபோல், தடுப்பூசிகளை திருடுவது, கடத்தும் சம்பவங்களும் நடக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE