புதுடில்லி:பி.எப்.ஐ., எனப்படும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு தொடர்புடைய, 26 இடங்களில், அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது.குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் டில்லியில், இந்தாண்டு துவக்கத்தில் பெரும் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்தை பணம் கொடுத்து துாண்டி விட்டதாக, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த அமைப்பு, சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், இது பற்றி அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் உட்பட ஒன்பது மாநிலங்களில், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய, 26 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.அந்த அமைப்பின் தலைவர் அப்துல் சலாம், அதன் கேரள மாநில தலைவர் நசுருதீன் வீடு மற்றும் அலுவலகங்களும், இதில் அடங்கும்.
அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய, பல்வேறு வங்கி கணக்குகளில், கடந்த ஆண்டு, டிச., 4 முதல், இந்தாண்டு ஜன., 6 வரை, 1.04 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தான், இந்த சோதனை நடத்தப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் சலாம் கூறுகையில் ''விவசாயிகள் பிரச்னையை திசை திருப்ப, இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
சென்னையிலும் அதிரடி!
சென்னை, புரசைவாக்கம் மூக்காத்தால் தெருவில்,
'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பின், மாநில தலைமை அலுவலகம்
செயல்படுகிறது. இதற்கு, மாவட்டம் தோறும் கிளை அலுவலகங்கள் உள்ளன. 'இந்த
அமைப்பு, சட்ட விரோதமாக முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.
பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுகிறது' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பு பணியில்
ஈடுபட்டனர்.
இந்நிலையில், புரசைவாக்கத்தில், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா
தலைமை அலுவலகம், அதே பகுதியில் வசிக்கும், இந்த அமைப்பின் முன்னாள் மாநில
தலைவர் இஸ்மாயில், ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள, தேசிய செயற்குழு உறுப்பினர் யா
முகைதீன் ஆகியோர் வீடுகளில், நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள்
சோதனையில்ஈடுபட்டனர்.
இதற்கு, அந்த அமைப்பின் நிர்வாகிகள் எதிர்ப்பு
தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை, போலீசார் அந்த இடங்களில்
இருந்து வெளியேற்றினர்.தென்காசி, மதுரை ஆகிய இடங்களிலும், பாப்புலர்
பிரன்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில்,
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE