'ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு கடன் கொடுத்து, தற்கொலைக்கு துாண்டும் செயலிகளை தடை செய்ய வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
ஜெயிக்க வைப்பது போல ஆசை காட்டி, பணத்தை சுருட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில், ஏராளமானோர் சிக்கித் தவிக்கின்றனர். சிலர் தற்கொலை செய்துள்ளனர் .இதுபோன்றோர், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் போது, 'உங்களுக்கு உடனடியாக கடன் வேண்டுமா; இந்த மொபைல் போன் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்' என, விளம்பரம் செய்யப்படும்.
அந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் போது, ஆதார் எண்; வங்கி கணக்கு எண், பான் கார்டு விபரம், கடன் கேட்பவரின் உறவினர், நண்பர்களின் மொபைல் போன் எண்களை திரட்டி விடுவர்.பின், 5,000 ரூபாய் கடன் கேட்பவர்களுக்கு, 1,500 ரூபாய் பிடித்தம் போக, 3,500 ரூபாயை, அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்துவர். ஒரு வாரத்தில், வட்டியுடன் சேர்த்து, 5,000 ரூபாயாக, கடன் கொடுத்த செயலிக்கு திருப்பி தந்து விட வேண்டும். கடனை திரும்ப செலுத்தாவிட்டால், மர்ம நபர்களிடம் இருந்து மிரட்டல் வரும். பின், உறவினர்கள், நண்பர்கள், அலுவலக அதிகாரிகளிடம், கடன் வாங்கியவரின் பெயரை குறிப்பிட்டு அசிங்கப்படுத்துவர்.
அவமானம் தாங்க முடியாமல் கடனை செலுத்துவோரிடம், வட்டிக்கு மேல் வட்டி வசூலிப்பர். இதுகுறித்து ஏற்கனவே, சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு செயலி வழி கடன் கொடுத்து மோசடி செய்யும் கும்பல், தற்போது, பெண்கள் மற்றும் மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிப்பது போல, குறிவைத்து செயல்படுகிறது.
இந்த கும்பலிடம், பல ஆயிரம் பேர் சிக்கித் தவிக்கின்றனர். செயலி வாயிலாக கடன் பெற்ற, சென்னை போரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் கூறியதாவது:
செயலி வழியாக வாங்கிய கடனுக்கு, வட்டிக்கு மேல் வட்டி கட்டுவதுடன் அவமானத்தையும் சந்திக்க நேரிடுகிறது. மர்ம நபர்களின் மிரட்டல்கள், தற்கொலைக்கு துாண்டும் வகையில் உள்ளன.தமிழக அரசு, ரம்மி எனப்படும், 'ஆன்லைன்' சூதாட்டத்தை தடை செய்துள்ளது. அதுபோல, கடன் கொடுக்கும் செயலிகளையும் தடை செய்து, மோசடி கும்பலிடம் சிக்கி தவிப்போரை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE