முதல்வருடன் அமித் ஷா பேச்சு
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று தொலைபேசியில், முதல்வர் இ.பி.எஸ்.,சை தொடர்பு கொண்டு பேசினார். 'புரெவி' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.தமிழக அரசு எடுத்துள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கை விபரங்களை, முதல்வரும் எடுத்துரைத்தார். அதைக் கேட்ட அமித் ஷா, 'தமிழகத்திற்கு வேண்டிய உதவிகளை வழங்க, மத்திய அரசு தயாராக உள்ளது' என, தெரிவித்துள்ளார்.
ரூ.16 லட்சம் இழப்பீடு
சென்னை: தஞ்சாவூர் பாபநாசத்தைச் சேர்ந்தவர் தங்கராசு, 55; கொத்தனார். இவர், 2018 ஜூலையில், சென்னை சேலையூர் கேம்ப் சாலை சந்திப்பில் நடந்து சென்ற போது, அதிவேக மாக வந்த பைக் மோதியதில் உயிரிழந்தார். தன் கணவரின் இறப்பிற்கு இழப்பீடு கோரி, தங்கராசின் மனைவி ராஜேஸ்வரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'மனுதாரருக்கு இழப்பீடாக, 15.72 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.
துாத்துக்குடி சிறப்பு ரயில் ரத்து
சென்னை: 'புரெவி' புயல் காரணமாக, சென்னை எழும்பூரில் இருந்து துாத்துக்குடிக்கு, நேற்று இயக்கப்பட்ட முத்துநகர் சிறப்பு ரயிலும், கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து, துாத்துக்குடிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலும், மதுரை - துாத்துக்குடி இடையே ரத்து செய்யப்பட்டன.இதனால், துாத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் முத்துநகர் சிறப்பு ரயில்; துாத்துக்குடியில் இருந்து, மைசூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ஆகியவையும், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரூ.65 கோடி கேட்கும் வாரியம்
சென்னை: தமிழகத்தில், நவம்பர் இறுதியில், 'நிவர்' புயல் வீசியது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட, 18 மாவட்டங்களில் இருந்த, 980 'பீடர்' எனப்படும், மின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டன.அந்த வழித்தடங்களில் இருந்த, 8,000 மின் கம்பங்கள்; 250 'டிரான்ஸ்பார்மர்'கள் உள்ளிட்ட மின் வினியோக சாதனங்களும் சேதமடைந்தன. மின் வாரியத்திற்கு, 65 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த தொகையை, நிவாரணமாக வழங்கும்படி, தமிழக அரசிடம் மின் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
எஸ்.பி.ஐ., சேவை பாதிப்பு
சென்னை: எஸ்.பி.ஐ., வங்கி வாடிக்கையாளர்கள் கூறியதாவது:பாரத ஸ்டேட் வங்கியான, எஸ்.பி.ஐ.,யில், மூன்று நாட்களாக, 'ஆன்லைன்' வங்கி சேவை தடைபட்டுள்ளது. ஆன்லைன் வங்கிக்கான, யோனோ செயலியும் செயல்படாததால், பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியவில்லை. யாருக்கும் பணம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை, வங்கி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.'தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 'யோனோ' செயலி செயல்படவில்லை; விரைவில், செயல்படும்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சரக்கு ரயிலால் ரூ.14.49 கோடி
சென்னை:
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள, வாலாஜாபாத் மையத்தில் இருந்து நவம்பர்
மாதத்தில், 22 சரக்கு ரயில்கள்; மேல்பாக்கத்தில் இருந்து, 37 சரக்கு
ரயில்கள் என, மொத்தம், 59 சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.இதில், 12
ஆயிரத்து, 158 கார்கள் ஏற்றிச் செல்லப்பட்டு உள்ளன. இந்த வகையில், 14.49
கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டில் கிடைத்த, 10.45
கோடி ரூபாயை விட, 39 சதவீதம் அதிகம்.
தொழிற்சங்கத்தினர் 'ஸ்டிரைக் நோட்டீஸ்
'சென்னை:
போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியதாவது: போக்குவரத்து
தொழிலாளர்களுக்கான, ௧௩வது ஊதிய ஒப்பந்தம், கடந்தாண்டு ஆகஸ்டுடன் முடிந்து
விட்டது. இதுவரை, 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு துவக்கப்படவில்லை. வரும், 17ம்
தேதிக்குள் ஊதிய ஒப்பந்த பேச்சை துவக்காவிட்டால், வேலை நிறுத்தத்தில்
ஈடுபட உள்ளோம்.இதற்கான, முறையான நோட்டீசை, போக்குவரத்து செயலர்,
போக்குவரத்து போலீஸ் கமிஷனர், தொழிலாளர் கமிஷனர், போக்குவரத்து கழக மேலாண்
இயக்குனர்களிடம் வழங்கி உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE