ராகுல் பேசும் பொதுக்கூட்டத்தில், ஸ்டாலின் பங்கேற்றாலும், தி.மு.க., கொடிகள் அதிகம் கட்ட, தமிழக காங்., முன்னணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், ராகுல் சுற்றுப்பயண திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம், தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், கே.எஸ்.அழகிரி, ஸ்ரீவல்லபிரசாத், தங்கபாலு, திருநாவுக்கரசர், இளங்கோவன், சுதர்சனநாச்சியப்பன், செல்லக்குமார், கார்த்தி, சி.டி.மெய்யப்பன் உள்ளிட்ட அனைத்து கோஷ்டி தலைவர்களும், முன்னணி நிர்வாகிகளும் பங்கேற்றனர். கோஷ்டி தலைவர்கள் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், தலா இரண்டு நாட்கள் வீதம், தமிழகத்தில், ராகுல் சுற்றுப் பயணத் திட்டத்தை வகுக்க வேண்டும். ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்.
சாலை மார்க்கமாக ராகுல் செல்கிற திட்டம், மூன்று இடங்களில் நடக்க வேண்டும். பெண்கள், தலித், விவசாயிகள், அறிவுசார் பிரிவினர்கள், மாணவர்கள், சிறுபான்மையினர், இளைஞர்கள் கலந்துரையாடலை மண்டலம், மாவட்ட அளவில், தனித்தனியாக பிரித்து நடத்த வேண்டும்.
ராகுல் பேசும் பொதுக்கூட்டத்திற்கு, ஸ்டாலினை அழைத்தால், அவரை வரவேற்று, தி.மு.க.,வினர் அதிகமாக, அவர்களின் கட்சி கொடிகளையும், வரவேற்பு பேனர்களையும் வைப்பர். அதை, அனுமதிக்கக் கூடாது. மூத்த தலைவர்கள், தங்கள் ஆதரவாளர்கள் போட்டியிட விரும்பும் விவரங்களை, தனித்தனியாக தேர்தல் பணிக்குழுவிடம் வழங்கலாம். தனிப்பட்ட ஒருவரிடம் வழங்கினால், அந்த விவரங்கள் வெளியாகி பிரச்னையை உருவாக்கும்.
இவ்வாறு, அவர்கள் பேசியதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.
தலைவர்கள் மவுனம் ஏன்?
காங்., ஆலோசனை கூட்டத்தில், ராகுல் சுற்றுப்பயண திட்டத்தை வகுக்கும் பைஜூ பங்கேற்றதால், கோஷ்டி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பேசாமல், பூசி மெழுகினர். ஆனால், ராகுல் பேசும் பொதுக்கூட்டத்தில், ஸ்டாலின் பங்கேற்கும் போது, தி.மு.க.,வினர் கொடி கட்ட அனுமதிக்கக் கூடாது என, எழுந்த கருத்தால், தி.மு.க., - காங்., கூட்டணியில், சுமூக உறவு நீடிக்கவில்லையோ என்ற சந்தேகம், கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
யசோதாவிற்கு மாரடைப்பு
கூட்டத்தில், மூத்த பெண் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான யசோதா பங்கேற்றார். கூட்டம் முடியும் தருவாயில், திடீரென யசோதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது; அவர் மயங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற டாக்டர்கள் செல்லக்குமார், விஷ்ணுபிரசாத் முதலுதவி செய்தனர். சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜகேகரன் ஏற்பாட்டில், சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனைக்கு, யசோதா அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட யசோதாவை, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர் சென்று பார்த்து, சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடம், யசோதாவின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். - நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE