புதுடில்லி : நம் நாட்டில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சுலபமாக வினியோகிக்கும் வகையில், ஐந்து கொரோனா தடுப்பூசி மருந்துகள், இறுதி கட்ட ஆய்வில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குனர், டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:'பைசர், ஆஸ்ட்ராஜெனகா, பாரத் பயோடெக், சைடஸ் கெடிலா, டாக்டர் ரெட்டிஸ் லேப்' ஆகிய ஐந்து நிறுவனங்களின், கொரோனா தடுப்பூசி மருந்துக்கான ஆய்வு இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதில், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு, பிரிட்டன் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த ஐந்து தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றுக்கு, இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம், அவசர கால அங்கீகாரம் அளிக்கும் என, தெரிகிறது.
இதில், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வினியோகிப்பது தான் பெரும் சவாலாக இருக்கும். ஏனெனில், இந்த தடுப்பூசி, மைனஸ் 70 டிகிரி செல்ஷியஸ் தட்ப வெப்பத்தில் பராமரிக்கப்பட்டு, வினியோகம் செய்ய வேண்டும்.அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவை. மற்றபடி, தடுப்பூசி மருந்துகளை, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சுலபமாக வினியோகிக்க வசதி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE