சென்னை : அதோ, இதோ என நழுவி வந்த நடிகர் ரஜினி, ஒருவழியாக, அரசியலுக்கு வந்து விட்டார். அரசியல் வருகையை, அவர் நேற்று உறுதி செய்தார். 25 ஆண்டுகளாக நீடித்த இழுபறிக்கு, இதன் வாயிலாக, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
ரஜினி, எப்போது அரசியலுக்கு வருவார் என, எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, நேற்று மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. 1995ம் ஆண்டு, 'பாட்ஷா' படம் வெளியான போது, ரஜினிக்கும், அரசியலுக்கும் முடிச்சு போடப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சிக்கு எதிராக, அவர் தெரிவித்த கருத்து அனலை பரப்பியது தான், அதற்கு காரணம்.
எதிர்ப்பு அறிக்கைகள்
அப்போதிலிருந்து, அவர் அரசியலுக்கு வருவார் என்றும், கட்சி துவங்குவார் என்றும், ரசிகர்கள் வட்டாரத்திலும், தமிழக அரசியல் வட்டத்திலும் பேசப்பட்டு வந்தது. அதற்கேற்ப, அவ்வப்போது அரசியல் ரீதியான ஆதரவு, எதிர்ப்பு அறிக்கைகளை, அவர் வெளியிட்டு வந்தார்.அதனால், ஒவ்வொரு தேர்தலின் போதும், ரஜினி பற்றிய பேச்சு எழுவதும், பின் அடங்குவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில், 2017, டிச., 31ல் ரசிகர்களை அழைத்துப் பேசிய ரஜினி, தனிக்கட்சி துவங்கி, 2021 சட்டசபை தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்தார்.
எல்லாத்தையும் மாற்றுவோம்.
அதைத் தொடர்ந்து, அவரது வருகையை, ரசிகர்கள் மட்டுமின்றி, கட்சிகளும் எதிர்பார்த்திருந்தன. இந்நிலையில், நேற்று மதியம், ரஜினி தன், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஜனவரியில் கட்சி துவக்கம்; டிசம்பர், 31ல் தேதி அறிவிப்பு. மாற்றுவோம், எல்லாத்தையும் மாற்றுவோம். இப்போது இல்லேன்னா எப்பவும் இல்லை.
வரப்போகிற சட்டசபை தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி, மத சார்பற்ற, ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்.இவ்வாறு, அதில் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும், அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மக்கள் மத்தியில் எழுச்சி
இந்நிலையில், சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள தன் இல்லத்தில், நேற்று மதியம், நிருபர்களை சந்தித்த, ரஜினி அளித்த பேட்டி:நான், 2017 டிச., 31ல் சொல்லியிருந்தேன். அப்போது, உள்ளாட்சி தேர்தல் வருவதாக இருந்தது. அதில், போட்டியிட மாட்டேன். லோக்சபா தேர்தலின் போது, அந்த நேரத்தில் முடிவு செய்வேன். சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சி ஆரம்பித்து, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என, கூறியிருந்தேன்.அதையடுத்து, மார்ச் மாதம், பத்திரிகையாளர்களை சந்தித்த போது, மக்கள் மத்தியில் எழுச்சி வர வேண்டும். அந்த எழுச்சியை உண்டாக்கிய பின், கட்சி ஆரம்பிப்பேன் என, கூறியிருந்தேன். அதற்காக, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தேன்; கொரோனா காரணமாக, அதை செய்ய முடியவில்லை.
உங்களுக்கு தெரியும்.எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து தான், மாற்று சிறுநீரகம் பொருத்துவர். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால், அது, ஏற்றுக் கொள்ளாது.ஆனால், கொரோனாவை எதிர்க்க, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும். எனவே, மக்கள் மத்தியில் சென்று, பிரசாரம் செய்தால், மருத்துவ ரீதியாக ஆபத்து என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மக்களை சந்தித்தால் தான், எழுச்சி ஏற்படுத்த முடியும் என, சிந்தித்தேன். சிங்கப்பூரில் உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் இருந்த போது, தமிழக மக்களின் பிரார்த்தனையால், வேண்டுதலால் உயிர் பிழைத்தேன். எனவே, அவர்களுக்காக, என் உயிரே போனாலும் சந்தோஷப்படுவதில், என்னை தவிர, வேறு யாரும் இருக்க முடியாது.
கொடுத்த வாக்கில் இருந்து, நான் என்றும் தவற மாட்டேன். அரசியல் மாற்றம் ரொம்ப அவசியம்; காலத்தின் தேவை. ஒரு அரசியல் மாற்றம் நடந்தே ஆக வேண்டும். இப்போது இல்லை என்றால், எப்போதுமே கிடையாது. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.
நான் ஒரு சின்ன கருவி தான். அதை, மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நான் அரசியலுக்கு வருகிறேன். மாற்றம் நடக்க வேண்டும். நான் வந்த பின், வெற்றி அடைந்தாலும், அது மக்கள் வெற்றி; தோல்வி அடைந்தாலும், அது மக்களுடைய தோல்வி. மாற்றத்திற்கு எல்லாரும் எனக்கு துணையாக நிற்க வேண்டும் என, தமிழக மக்களை, இரண்டு கை கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
'அண்ணாத்தே' படப்பிடிப்பு வேலைகள், 40 சதவீதம் மீதம் உள்ளன. அதை முடித்து கொடுக்க வேண்டும். அது என் கடமை. அதை முடித்து விட்டு வந்து விடுவேன். டிச., 31ல், கட்சி துவக்க போகிறேன். அது, மிகப் பெரிய வேலை. அதை செய்வதற்கான பணிகளை துவக்கி விட்டேன். அரசியலுக்கு வருகிறேன் என கூறியதில் இருந்து, என்னை ஆதரித்த தமிழருவி மணியனை, கட்சி மேற்பார்வையாளராக நியமிக்கிறேன். அடுத்து, அர்ஜுன மூர்த்தி எனக்கு கிடைத்தது பாக்கியம். அவரை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கிறேன்.
கடினமாக வேலை செய்து, என்னால் முடிந்ததை முயற்சித்து, இந்த பாதையில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது. ஒவ்வொருத்தருக்கும் தலையெழுத்து உண்டு. அதேபோல், ஒவ்வொரு நாட்டுக்கும் தலையெழுத்து உள்ளது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாகி விட்டது. அது, நிச்சயம் நடக்கும். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், இப்போது இல்லை என்றால், எப்போதும் இல்லை. மாற்றுவோம்; எல்லாவற்றையும் மாற்றுவோம்.
மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த போது, உள்ளுக்குள் எவ்வளவோ ஆதங்கம் இருந்தாலும், அதை தாங்கிக் கொண்டு, 'நீங்கள் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும், உங்கள் ஆரோக்கியம் தான் முக்கியம்' என்றனர்; அவர்களுக்கு நன்றி. இவ்வாறு, அவர் கூறினார்.
திரையுலகினர் வரவேற்பு!
அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்திய ரஜினிக்கு, திரையுலகினர் வரவேற்பு தெரிவித்து ள்ளனர். இதுகுறித்து, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள, அவரது பதிவில், 'மாத்துவோம்... எல்லாத்தையும் மாத்துவோம்; இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல' என்ற முழக்கத்தை பயன்படுத்தினார்.இது, இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையே திரையுலகினர், மற்றவர்களுக்கு பகிர்ந்து, ரஜினியின் அரசியல் வருகைக்கு, வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
![]()
|
* நடிகர் ராகவா லாரன்ஸ்: மிக்க நன்றி தலைவா... உங்களது செய்தியை கேட்டபோது, லட்சக்கணக்கான உங்களின் ரசிகர்களை போலவே, நானும் இதற்காகவே காத்திருந்தேன். ராகவேந்திரா சுவாமியை வேண்டுகிறேன். உங்களது கனவு அனைத்தும் நிஜமாக வேண்டும். நீங்கள் பூரண ஆயுளும் பெற வேண்டும்.
* இசையமைப்பாளர் அனிருத்: இனி தான் ஆரம்பம்; தலைவர் ஆட்டம் ஆரம்பம். மேலும், ரஜினி மகள் சவுந்தர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர், 'மாத்துவோம்... இனி எல்லாத்தையும் மாத்துவோம்' என, கூறியுள்ளனர். நடிகர் யோகிபாபு, ரஜினி காட்டிய, பாபா முத்திரையை, 'டுவிட்டரில்' பகிர்ந்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் போட்டியிடுவாரா?
கிருஷ்ணகிரி மாவட்ட செயலர் சீனிவாசன் கூறியதாவது: ஜனவரியில், ரஜினி கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளதால், மகிழ்ச்சி அடைந்துள்ளோம். தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளிலும், ரஜினி கட்சி வெற்றி பெறும். கிருஷ்ணகிரி மாவட்டம், ரஜினியின் சொந்த மாவட்டம். அவர், கிருஷ்ணகிரி மண்ணில் போட்டியிட்டு, இந்த நாட்டை ஆள வேண்டும். இதற்காக, அயராது உழைக்க, நாங்கள் தயாராக உள்ளோம். ரஜினி, முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்து சொல்ல முதல்வர் மறுப்பு!
''ரஜினி அறிவிப்பு குறித்து, முழுமையாக தெரிந்த பின் பதில் கூறுகிறேன்,'' என, முதல்வர் கூறினார்.சேலத்தில், அவர் கூறியதாவது:அ.தி.மு.க., அரசு, மக்கள் பணியில் சிறப்பாக செயல்படுகிறது. ரஜினி அறிவிப்பு குறித்து, முழுமையாக தெரிந்த பின் பதில் கூறுகிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்
* உண்மையான தீபாவளி!
ரஜினி துவங்க உள்ள கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள,தமிழருவி மணியன் கூறியதாவது:செல்வமும் செல்வாக்கும், புகழும், பெருமையும் தேடித் தந்த தமிழக மக்களுக்கு, தன்னால் இயன்ற வகையில் நன்றி கடன் ஆற்ற வேண்டும் என்பது தான், ரஜினியின் பெரு விருப்பமாக உள்ளது. அந்த விருப்பத்தின் அடிப்படையில், அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.வெறுப்பு அரசியல் வேரோடியிருக்கும் தமிழகத்தில், அன்பு சார்ந்து, அன்பை ஆதர்சனமாக கொண்டு, ஜாதி, மதம் பேதமற்று, அனைவரையும் அன்பால் தழுவுகிற ஆன்மிக அரசியலை அரங்கேற்றுகிறார்.
இது, தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கும் புதிய திசையை காட்டும். தன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும், மருத்துவர்கள் எச்சரிக்கையை புறக்கணித்து விட்டு, மக்கள் நலனுக்காக, மாற்று அரசியல், இந்த மண்ணில் மலர வேண்டும் என்பதற்காக, மிகப்பெரிய வேள்வியில் இறங்கி உள்ளார். ஒட்டுமொத்த தமிழக மக்களும், ஊழலற்ற மிகச் சிறந்த நிர்வாகத்தை சந்திக்க உள்ளனர்; அதை தர ரஜினி உள்ளார். ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை, இவர் ஒருவரால் மட்டும் தர முடியும் என, எதிர்பார்க்கும் வாக்காளர்களுக்கு, இன்று தான் உண்மையான தீபாவளி. மாற்றம் நோக்கி, அவர் புறப்பட்டு விட்டார். மக்கள், அவர் கனவை நனவாக்குவர். ராமருக்கு அணில் மணல் சுமந்து உதவியது போல, என்னால் ஆன உதவிகளை செய்வேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
* யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
ரஜினி துவக்க உள்ள கட்சியின், தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, அர்ஜுனமூர்த்தி, 60 புதுக்கோட்டையை சேர்ந்தவர்; தொழில் அதிபர். ஆரம்பத்தில், உணவு பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டார். அதன்பின், தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான தொழிலில் இறங்கினார். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு, தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின், அரசியல் ஆலோசகராக இருந்துள்ளார். அவரது மறைவுக்கு பின், பா.ஜ.,வில் இணைந்தார். தமிழக பா.ஜ., அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின், மாமா வீட்டில் சம்பந்தம் செய்தவர். இவரது மனைவி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமனின் பள்ளித்தோழி. பா.ஜ., தலைமையுடன் நெருக்கமாக இருந்து வந்தார். தற்போது, அவர் ரஜினியுடன் இணைந்துள்ளார். இது குறித்து, அர்ஜுனமூர்த்தி கூறுகையில், ''ரஜினி மிகப்பெரிய தலைவர். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார். அதில் பங்கேற்கும் வாய்ப்பை தந்துள்ளார். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஏற்படப் போகிறது. அதற்கு பணியாற்றுவது, ஆத்ம திருப்தியை கொடுக்கும்,'' என்றார்.
* மாற்று அரசியல்
![]()
|
தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி கூறியதாவது: இது, எனக்கு கிடைத்த மிகப்பெரிய அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை நல்கிய தலைவருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. இந்த அமைப்பில், எங்களுக்கு உதவிகரமாக, தமிழருவி மணியன் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.எங்கள் அரசியல் பயணத்தில், மாற்று அரசியல் கொண்டு வர, ஆயத்தமாக உள்ளோம்.
இந்த மாற்றத்தை, உண்மையான அரசு அமைவதை சந்திக்க போகிறீர்கள். அதற்கான சிந்தனையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். மக்கள் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பா.ஜ.,வில் இருந்து அர்ஜுன மூர்த்தி விடுவிப்பு!
நடிகர் ரஜினி துவக்க உள்ள கட்சியின், தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன மூர்த்தி, பா.ஜ., பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.தமிழக பா.ஜ., அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்தவர், அர்ஜுன மூர்த்தி. தற்போது, ரஜினி துவங்க உள்ள கட்சியின், தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக, கட்சி தலைமைக்கு கடிதம் கொடுத்திருந்தார்.அதை, பா.ஜ., தலைமை ஏற்றது.
'கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், அவர் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்' என, பா.ஜ., பொதுச்செயலர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
அழகிரி வாழ்த்து
ரஜினியும், அழகிரியும் நெருங்கிய நண்பர்கள். தி.மு.க.,வை விட்டு வெளியேற்றப்பட்ட அழகிரி, ரஜினி கட்சி துவங்கினால் அவருடன் இணைந்து பணியாற்றும் எண்ணத்தில் உள்ளார்.
இந்நிலையில், ரஜினி புதிய கட்சி துவங்கும் அறிவிப்பை அடுத்து, மதுரையில் இருந்து தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்ட அழகிரி, வாழ்த்து தெரிவித்து, 'உடல்நிலையில் அதிக அக்கறை செலுத்துங்கள்' என கூறியுள்ளார்.
ரஜினி அரசியல் பாதை.
* 1995: முத்து படத்தில் 'நான் எப்ப வருவேன்; எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்தில் வருவேன்' என, பஞ்ச் டயலாக் பேசி, முதன்முதலாக தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார் ரஜினி.
* 2017 மே : சென்னையில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.
* டிச., 31: அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டி என அறிவிப்பு.
* 2019: லோக்சபா தேர்தலின் போது, 'சொன்னதை செய்வேன். எங்களின் இலக்கு சட்டசபை தேர்தல் தான்' என்றார்.
* 2020 மார்ச், 5: மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்துக்கு பின் பேசிய இவர், 'என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்' என்றார்.
* 2020
மார்ச், 12: 'கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை' என்ற முடிவில் இருப்பதாக தெரிவித்தார்.
* 2020 அக்., 29: தன் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு பதிலளித்த ரஜினி, அது, என்னுடைய அறிக்கை அல்ல ; ஆனால், அதிலுள்ள தகவல் உண்மை என்றார்.
* 2020 நவ., 30: மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை.
* 2020
டிச., 3: ஜனவரியில் கட்சி துவங்குவதாகவும், டிச., 31ல் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE