சென்னை:'ஜெயலலிதா நினைவு தினமான நாளை மாலை, 6:00 மணிக்கு, அவரது படத்தின் முன் விளக்கேற்றி வைத்து, அவர் சேமித்து வைத்திருந்த கனவுகளையும், லட்சியங்களையும் சாத்தியமாக்கிட, வீர சபதம் எடுப்போம்' என, அ.தி.மு.க., தலைமை வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதிஉள்ள கடிதம்:அ.தி.மு.க., தொண்டர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும், டிச., 5 பெருந்துயர் தந்த பேரிடர் கறுப்பு நாள். ஆறு முறை தமிழகத்தை அரசாண்டு, நம்மை வழிநடத்திய ஜெயலலிதா, நம்மை விட்டு விடை பெற்ற நாள்.
அவர் பிரிந்தாலும், நம்மிடம், அவர் ஒப்படைத்து சென்ற அரசாட்சியை, இந்தியாவே புகழும் நல்லாட்சியாக, நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகத்தின் வழியே, அவரை வெல்ல முடியாதவர்கள், அவர் மீது அடுக்கடுக்காக பழிகளை சுமத்தி, நீதிமன்ற படிக்கட்டுகளில் அலைய வைத்து, அவரது ஆயுளை பறித்தனர்.
இன்று கொள்ளை அடித்து வைத்திருக்கும், 'ஸ்பெக்ட்ரம்' பணத்தை வைத்து, அதிகாரத்தை அபகரித்து விடலாம் என்று வெறிபிடித்து அலைகின்றனர். ஜெ.,வை வஞ்சகத்தால் வீழ்த்திய கும்பல், தற்போது அதிகார பசியில் வாய் பிளந்த வண்ணம் வெறிகொண்டு அலைகிறது. அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய பொறுப்பு, நமக்கே உரியது.
அப்பனுக்கு பின் மகன், மகனுக்கு பின் பேரன், பேரனுக்கு பின் கொள்ளுப்பேரன் என, கொள்ளை அடிப்பதையே நோக்கமாகக் கொண்ட, சதிகார கூட்டத்தை வென்று காட்ட, நாளை மாலை, 6:00 மணிக்கு, ஜெ., படத்தின் முன் அகல் விளக்கேற்றி வைத்து, அவர் சேமித்து வைத்திருந்த கனவுகளையும், லட்சியங்களையும் சாத்தியமாக்கிட, வீர சபதம் எடுப்போம்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE