வாஷிங்டன்:கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து, மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, அதை தங்கள் உடம்பில் செலுத்திக் கொள்ள, முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ் மற்றும் பில் கிளின்டன் ஆகியோர் முன்வந்துள்ளனர்.
அமெரிக்காவில், கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்த பின், தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து, அமெரிக்க மக்கள் மத்தியில் பரவலான அச்சம் நிலவுவதாக, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்த அச்சத்தை போக்குவதற்காக, தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்ததும், அதை தங்கள் மீது செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள, முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ் மற்றும் பில் கிளின்டன் ஆகியோர் முன்வந்துள்ளனர்.இந்த தகவலை, அவர்களது செயலர்கள் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்காவின், தேசிய தொற்று நோய் மற்றும் ஒவ்வாமை கல்வி நிறுவன இயக்குனர், டாக்டர் ஆன்டனி பவுசி மற்றும் வெள்ளை மாளிகையின் கொரோனா நடவடிக்கை ஒருங்கிணைப்பாளர், டாக்டர் டெபோரா பிர்க்ஸ் ஆகியோர், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து, தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட பின், பொது வெளியில் தடுப்பூசியை தங்கள் உடம்பில் செலுத்திக் கொள்ள, முன்னாள் அதிபர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.இதை, படம்பிடித்து, 'டிவி'களில் ஒளிபரப்பி, மக்கள் அச்சத்தை போக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE