புதுடில்லி:விவசாய சங்கத்தினருடன், மத்திய அரசு, தொடர்ந்து எட்டு மணி நேரம் பேசியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, அடுத்தகட்டமாக, நாளை மீண்டும் பேச்சைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், டில்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
விவசாயிகள், தங்கள் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்வது உள்ளிட்டவை அடங்கிய, மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால், -'எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படும் அபாயம் உள்ளது' என, விவசாயிகள் இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
'டில்லி சலோ' என்ற பெயரில், பேரணி மற்றும் போராட்டத்துக்கு, 35க்கும் மேற்பட்ட பஞ்சாப் விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன.டில்லி எல்லையில் முகாமிட்டு இவர்கள், தொடர்ந்து எட்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, சமீபத்தில் பேச்சு நடத்தியது. இந்த சட்டங்களில் விவசாயிகளுக்கு உள்ள பிரச்னை குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 'சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தினர். அதனால், தீர்வு எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது.நேற்று மீண்டும் பேச்சு நடந்தது. இதில், மத்திய அரசின் சார்பில், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல், வர்த்தகத் துறை இணைஅமைச்சர் சோம் பிரகாஷ் பங்கேற்றனர். விவசாய சங்கங்களைச் சேர்ந்த, 40 பேர், இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, எட்டு மணி நேரம், இந்த பேச்சு நடந்தது. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.இதையடுத்து, ''நாளை மீண்டும் சந்தித்து அடுத்தக்கட்ட பேச்சை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது,'' என, நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இது குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:குறைந்தபட்ச ஆதார விலை, கொள்முதல் முறைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப் பட்டு உள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இது குறித்து பேசுவோம். அதன் பிறகே, அடுத்தக்கட்ட பேச்சில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
முதல்வர் சந்திப்பு
மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷாவை, டில்லியில் அவரது இல்லத்தில், காங்.,கைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சந்தித்து பேசினார். ''எங்கள் நிலை குறித்து விளக்கினேன். விவசாயிகள் போராட்டத்தால், பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும்படி வலியுறுத்தினேன்,'' என, அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
விருதை திருப்பி அளித்த பாதல்!
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தனக்கு வழங்கப்பட்ட, பத்ம விபூஷண் விருதை, அகாலி தள மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் திருப்பி அளித்தார். அகாலி தளத்தின் அதிருப்தி தலைவரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான சுக்தேவ் சிங் திண்ட்சாவும், தனக்கு வழங்கப்பட்ட, பத்ம பூஷண் விருதை திருப்பி தரப்போவதாக அறிவித்துள்ளார்.
உணவை ஏற்க மறுப்பு!
மத்திய அமைச்சர்களுடன் பேச்சில் ஈடுபட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள், மதிய உணவு இடைவேளையின்போது, அரசு ஏற்பாடு செய்திருந்த உணவை ஏற்க மறுத்தனர். டில்லியின் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தயாரித்த உணவு, அவர்களுக்கு வேன் மூலம் எடுத்து வரப்பட்டது. அந்த உணவையே அவர்கள் சாப்பிட்டனர். அரசு தரப்பில் வழங்கப் பட்ட, குடிநீர், தேநீரையும் ஏற்க, விவசாய சங்கப் பிரதிநிதிகள் மறுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்!
டில்லியுடனான ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநில எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், இந்த இரு மாநிலங்களில் இருந்து, டில்லிக்கு வரும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அண்டை மாநிலங்களில் இருந்து, டில்லிக்கு வருவோர் கடும் சிரமத்தை சந்திக்க நேரிட்டது. இதனால், டில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE