காரைக்குடி : பாரம்பரிய சுற்றுலா மற்றும் கல்வி நகரான காரைக்குடி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காரைக்குடி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
காரைக்குடி நகராட்சியிலுள்ள 36 வார்டுகளில் 1.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஆண்டுக்கு தொழில், வீடு, குடிநீர், வாடகை கட்டட வரிகள் உள்ளிட்ட வகையில் 15 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. மாவட்டத்தில் மிகப்பெரிய நகரான காரைக்குடி சிறப்பு பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. கல்வி நகரான இங்கு நர்சரி பள்ளி முதல் முனைவர் பட்டம் பெறும் வரை பள்ளி, கல்லுாரி, அழகப்பா பல்கலை, மேலாண்மை கல்வி மையம் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இச்சிறப்பு பெற்ற கல்வி நகரில் கல்வி கற்க வெளி மாநில, மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், ராமேஸ்வரத்தை இணைக்கும் விதத்தில் காரைக்குடி ரயில்வே ஜங்ஷன், விரைவில் செட்டிநாடு கால்நடை பண்ணையில் தனியார் ஹெலிகாப்டர் சுற்றுலா தலம் என காரைக்குடியை மையமாக வைத்து எண்ணற்ற மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இதன் காரணமாக காரைக்குடி நகராட்சி சிறப்பு நிலை அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளது.
காரைக்குடி நகராட்சி நிலை
இச்சிறப்பு பெற்ற நகராட்சி எல்கை 36 வார்டுகளுக்கு உட்பட்டு தேவகோட்டை ரஸ்தா, செக்காலை வாட்டர் டேங்க், கழனிவாசல், காரைக்குடி சம்பை ஊற்று வரை பறந்து விரிந்து கிடக்கின்றன. மக்கள் தொகை பெருக்கம், வருவாய்க்கு ஏற்ப நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் காரைக்குடி உள்ளது. 2010ம் ஆண்டில் இருந்தே நகர் மன்ற கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றி, காரைக்குடிக்கு மாநகராட்சி அந்தஸ்து வழங்க கோரி அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கோரிக்கை வைத்து 10ஆண்டுகளை கடந்தும் அரசு இது வரை காரைக்குடிக்கு மாநகராட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால், நகராட்சியில் 48 வார்டுகள் வரை அமைக்கும் விதத்தில் விரிவாக்கம் பெற்றிருந்தும், அரசு அனுமதி வழங்காததால் மாநகராட்சி அந்தஸ்து திட்டம் கிடப்பில் இருந்து வருகிறது.
தமிழக அரசு காரைக்குடி நகரை சுற்றியுள்ள கோவிலுார், சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களையும் காரைக்குடி நகராட்சியுடன் இணைத்து, வார்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பாரம்பரிய நகர் மக்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE