திருப்புவனம் : திருப்புவனம் தாலுகா தலைநகராக மாறியும் மீட்பு பணிகளுக்கு பிற மாவட்ட வீரர்களை நம்பி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மானாமதுரை தாலுகாவில்இருந்து எட்டு ஆண்டுகளுக்கு முன் முதல்வர் ஜெ.,திருப்புவனத்தை தனி தாலுகாவாக அறிவித்தார். அறிவிப்பு வந்த நிலையில் தாலுகா அலுவலகம் மட்டும் செயல்பாட்டிற்கு வந்தது. அரசு அலுவலகங்கள் இல்லாததால் கிராமமக்கள் மீண்டும் அலைக்கழிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.திருப்புவனம் தாலுகாவில் காஞ்சிரங்குளம், கழுவன்குளம், முக்குடி, கரிசல்குளம், பொட்டப்பாளையம், பாட்டம் உள்ளிட்ட 163 கிராமங்கள் உள்ளன.
இதில் கழுவன்குளம்,காஞ்சிரங்குளம் உள்ளிட்ட கிராம மக்கள் நீதிமன்றம், டி.எஸ்.பி.,அலுவலகம் செல்ல மூன்று பஸ்கள், கலெக்டர் அலுவலகம்,எஸ்.பி.,அலுவலகம் செல்ல நான்கு பஸ்கள் மாற வேண்டிய நிலை இருந்தது.இதனை தவிர்க்க திருப்புவனம் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இன்று வரை டி.எஸ்.பி.,அலுவலகம், தீயணைப்பு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் திருப்புவனத்தில் இல்லை. மானாமதுரைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது.
திருப்புவனம் தாலுகாவில் வரத்து கால்வாய்கள் அதிகம்.நீர்வரத்து உள்ள காலங்களில் சிறுவர்கள் உள்ளிட்டோர் தவறி விழுந்தால் மீட்பு பணிக்கு மதுரையில் இருந்து தான் மீட்பு பணி வீரர்கள் அவசரத்திற்கு வர வேண்டியுள்ளது.மானாமதுரை 28 கி.மீ துாரத்தில் உள்ளது. மேலும் கட்டடங்களுக்கு தடையில்லா சான்று பெற,சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தங்கள் தரப்பு நியாயங்களை சொல்ல டி.எஸ்.பி.,யிடம் மனு கொடுக்க மானாமதுரை செல்ல வேண்டியுள்ளது.
தாலுகா தலைநகராக அறிவித்தும் இன்னமும் அலைச்சலுக்கு ஆளாகி வருவதாக விவசாயிகளும், கிராமமக்களும் புலம்புகின்றனர். எனவே திருப்புவனத்தில் அனைத்து அலுவலகங்களையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE