நலம் நலமறிய ஆவல்: டிச.7 தேசிய கடிதம் எழுதல் தினம்| Dinamalar

நலம் நலமறிய ஆவல்: டிச.7 தேசிய கடிதம் எழுதல் தினம்

Added : டிச 03, 2020
Share
கடிதம். எத்தனை மனிதர்களை உணர்வுபூர்வமாக கட்டிப்போட்ட சொல் இது. கடிதத்தை மட்டுமல்ல கடிதத்தை கொண்டு வரும் தபால்காரரையும் கொண்டாடிய சமூகம் நம்முடையது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 தேசிய கடிதம் எழுதும் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவர் கையால் கடிதம் எழுதுவதை விரும்பி காதலித்தார். அவர் மூலம்
 நலம் நலமறிய ஆவல்

கடிதம். எத்தனை மனிதர்களை உணர்வுபூர்வமாக கட்டிப்போட்ட சொல் இது. கடிதத்தை மட்டுமல்ல கடிதத்தை கொண்டு வரும் தபால்காரரையும் கொண்டாடிய சமூகம் நம்முடையது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 தேசிய கடிதம் எழுதும் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவர் கையால் கடிதம் எழுதுவதை விரும்பி காதலித்தார். அவர் மூலம் தான் கடித தினம் உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டது.பழங்காலத்தில் பனை ஓலைகளில் எழுதி பின்பு காகிதத்துக்கு மாறிப்போனோம். தற்போது காகிதத்துக்கும் தேவையின்றி மின்னணு பரிமாற்றங்களிலேயே பெரும்பாலான தகவல்கள் கடத்தப்படுகிறது.


தனிக்கலைகடிதம் எழுதுவதென்பது தனிக்கலை. கடிதம் எழுதுகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு எழுத்தாளரான மிடுக்கு வரும். நலம் நலமறிய ஆவல் என்ற ஒரு வாக்கியம் சம்பிரதாயமாக இருந்தாலும் அது ஏற்படுத்திய நலம் சார்ந்த விருப்பம் சிறப்பானதாகவே இருந்திருக்கிறது.இன்றைய தகவல்தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியில் நினைத்த மாத்திரத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம். இந்த நலம் குறித்த விசாரிப்புகள் கடிதம் வழி ஏற்படுத்திய தாக்கம் என்பது அதிகம். மின்னஞ்சல், முகநுால், போன்ற எண்ணற்ற வசதிகள் வந்த பின்னும், கால் நுாற்றாண்டு முன்பு வரை இந்த உலகம் அறிந்த தகவல் பரிமாற்ற வழி கடிதம் மட்டுமே.

இன்றைய தேதியில் நமக்கு கடிதம் வந்திருக்கிறது என்றால் நம் புருவங்கள் உயரக்கூடும். அப்படி ஒருவர் நமக்காக கடிதம் எழுதும் பட்சத்தில் அது ஒரு பொக்கிஷமான பரிசாக கொண்டாடப்பட வேண்டும்.ஒவ்வொரு காகிதமும் சிவப்பு வண்ண பெட்டியின் கர்ப்பத்தில் சுவாசித்து, தபால்காரரிடம் தொப்புள் கொடி அறுபட்டு, காணக் கிழிப்பவரின் உதட்டோர புன்னகையில் உயிர் பெறுகிறது கடிதமாய். நலம் விளம்பி, நலமறிய அவா கிளப்பி, கசிந்துருக்கி, கண்ணீர் பெருக்கி, காதல் போர்த்தி, வாழ்த்து ஏந்தி, வருகை பதிந்து, சமயத்தில் வன்மம் தோய்ந்து, நிச்சயம் தெரிவித்து, நிர்கதிநிலை அறிவித்து என எத்தனை அவதாரம் எடுத்து நம்மையெல்லாம் நெகிழ்ச்சிபடுத்தியுள்ளன கடிதங்கள்! கைப்பக்குவம் கணக்காய் கடித பக்குவமும் வாய்த்திருந்தது பலருக்கு.எத்தனை வசதிகள்கடிதத்தில் தான் எத்தனை வசதிகள். உச்சி முகரலாம். நெஞ்சோடு அணைக்கலாம் இதழ் பதிக்கலாம், வர்ணனை ரசிக்கலாம், கையெழுத்தைப் பார்த்து மனம் குளிரலாம், எழுதியவரின் வாசனை முகரலாம்.கோபம் வரின் கையோடு கடிதத்தை கசக்கலாம். இன்றைய குறுந்தகவல்களின் பரிமாற்றம் எல்லாம் எழுத முனைந்த மெனக்கெடலுக்கு முன் ஈடாகவே ஆகாது. காலாவதியான மாத்திரைகளை விசிறி எறிவதாய் கடிதத்தையும் வழியனுப்பிவிட்டது காலம். நமக்கு வந்த கடிதத்தை படிப்பது என்றாலே மூளைக்குள் ஒரு கிறுகிறுப்பு தோன்றும். நம் உள்ளுணர்வை உயிர்ப்பித்து மாய நதிகளை மனதுக்குள் கிளைபரப்பி பாய விட்ட அற்புத தருணங்களை நமக்கு வசமாக்கித் தந்திருக்கிறது கடிதங்கள். ஒரு காலத்தில் ஒவ்வொரு இல்லத்திலும் வளைக்கப்பட்ட 'Z' வடிவ கோர்வைகளில் கடிதங்கள் எல்லாம் தொங்கிக் கொண்டிருக்கும். அன்புள்ள மகளுக்கு அம்மா ஆசிர்வாதத்துடன் எழுதுவது என்ற துவக்க வரிகள் எத்தனை முறை கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்துள்ளது. பாராட்டுக் கடிதங்கள், நட்புக் கடிதங்கள், காதல் கடிதங்கள், அலுவலகக் கடிதங்கள், பரிந்துரைக் கடிதங்கள், அரசியல் கடிதங்கள், உணர்ச்சிக் கடிதங்கள், வேண்டுகோள் கடிதங்கள், இலக்கியக் கடிதங்கள், வணிகக் கடிதங்கள் என எத்தனை வகைப்பாடுகளில் கருத்துக்களை சுமந்து பயணித்திருக்கிறது.


சித்திரங்கள் வழியேசித்திரங்கள் வழி கடிதங்கள் வரைவது ஒரு மேம்பட்ட கலை. பறவை, விளக்கு, நினைவுச்சின்னம், விலங்குகள் போன்றவற்றை வரைந்து அதன் உள்ளே வரிகளை அழகாக நேர்த்தியுடன் வடிவமைத்து எழுதுவதே சித்திரகடிதங்கள். அவற்றை படிப்பதோடு கண்டு ரசிக்கவும் செய்யலாம். பார்த்தவுடன் மனதை கொள்ளை கொள்ளும் இந்த சித்திரக்கடிதங்கள் எழுதுவோரை தற்போது விரல்விட்டு எண்ணிவிடலாம்.. புகார், வாழ்த்து, கோரிக்கை என கருப்பொருளை வரைந்து எழுத்துகளால் கடிதம் எழுதி கவனம் ஈர்ப்போரும் உண்டு பல தலைவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கடிதங்கள் இன்று வரலாறு. நேரு சிறைவாசத்தின் போது மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதங்கள் புகழ் பெற்றவை. பாரதியின் கடிதங்களில் மொழிப்பற்றும் புரட்சிகர சிந்தனைகளும் காணக்கிடைக்கின்றன. மு.வ.,அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு எனும் தலைப்பில் எழுதிய அனைத்தும் கடித இலக்கியம்.


புரட்சிக்கு காரணம்வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளுக்கும் சில புரட்சிகளுக்கும் காரணமாக சில கடிதங்கள் இருந்திருக்கின்றன. 1939 ஆகஸ்ட் 2ல் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு ஐன்ஸ்டீன் அனுப்பிய கடிதத்தில் ஜெர்மனியின் நாசி படையினர் அணு ஆயுதங்களை போரில் உபயோகிக்க போகின்றனர். ஓர் சிறிய படகில் ஏற்றி வந்து நமது துறைமுகத்தில் வெடிக்க செய்தால் கூட ஒட்டுமொத்த துறைமுகமும் சின்னாபின்னமாகிவிடும். எனவே, நீங்கள் முந்திக்கொண்டு செயல்பட வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தின் மூலமாக அமெரிக்கா நாசி படையினருக்கு முன்பே அணுகுண்டுகளை கையாள முனைந்தது.1960ல் கிரேஸ் டேபெல் எனும் 11 வயது சிறுமி அமெரிக்க ஜனாதி பதியான ஆபிரகாம் லிங்கனுக்கு கடிதம் எழுதினாள். அதில் 'பெண்களுக்கு தாடி வைத்திருப்பவர்களை பிடிக்கும். உங்கள் முகம் தாடி இருப்பதால் தான் நன்றாக இருக்கிறது.

இதனாலேயே பெண்கள் அவர்கள் கணவர்களையும் உங்களுக்கு ஓட்டு போட கட்டாயப்படுத்தினர். இதனால் தான் உங்களால் ஜனாதிபதியாக முடிந்தது' என்று குறும்பாக எழுதியிருந்தார். இதன் காரணமாக நிரந்தரமாக தாடி வைத்துக் கொண்டார் லிங்கன்.இந்திய விடுதலைக்காக காந்தி எழுதிய கடிதம், மூன்றாம் கிங் ஹென்றியின் புரட்சிகரமான காதல் கடிதம், முதலாம் உலகப்போரில் அமெரிக்காவை இணைத்த கடிதம் என காலத்தால் அழிக்க முடியாத நினைவுச் சின்னமாக கடிதங்கள் திகழ்கிறது. நீங்களும் உங்கள் இணைக்கோ, உடன்பிறப்புக்கோ, உறவுகளுக்கோ, நண்பர்களுக்கோ ஒருமுறை கடிதம் எழுதித்தான் பாருங்களேன்.-பவித்ரா நந்தகுமார், எழுத்தாளர் ஆரணி. 94430 06882

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X