சிவகங்கை : சிவகங்கை நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க 8 ஆண்டுக்கு முன் திட்டமிட்ட புறவழிச்சாலை (பைபாஸ் ரோடு) திட்டத்தை விரைந்த முடிக்க முதல்வர் பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை நகரை கடந்து தஞ்சாவூர்-மானாமதுரை நெடுஞ்சாலை, கொச்சி-தொண்டி தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. நகரை சுற்றியுள்ள வாணியங்குடி, சுந்தரநடப்பு, காஞ்சிரங்கால், ரோஸ் நகர், பையூர் உள்ளிட்ட பகுதிகள் விரிவாக்கமடைந்து, வீடுகள் அதிகரித்துள்ளன. சிவகங்கைக்கு தஞ்சாவூர், மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் வந்துசெல்வதின் மூலம் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக மதுரை முக்கு குறுகிய ரோடாக இருப்பது, இளையான்குடி இன்டேன் காஸ் நிரப்பும் தொழிற்சாலை உட்பட பிற தொழிற்சாலைக்கு செல்லும் கனரக வாகனங்கள் இந்த ரோட்டை கடந்து செல்வதற்குள் சிரமத்திற்கு உள்ளாகின்றன.
இதன் காரணமாக நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் தஞ்சாவூர் - மானாமதுரை இடையே செல்லும் ரோட்டிற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பெருமாள் பட்டியில் இருந்து சாமியார்பட்டி வரை புறவழிச்சாலை (பைபாஸ் ரோடு) அமைத்தனர். இதன் மூலம் சற்று போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.இருப்பினும் பையூர், வந்தவாசி, ஆயுதப்படை குடியிருப்பு போன்ற பகுதிகள் வளர்ந்து வருவதால், இந்த பகுதியிலும் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் பைபாஸ் ரோடு போடப்படும் என 2011-2012ல் அறிவித்தனர்.
நிலங்களுக்கு ரூ.20 கோடி
அந்த வகையில் திருப்புத்துார் ரோட்டில் காஞ்சிரங்காலில் இருந்து சூரக்குளம், பையூர் குடியிருப்பு, ஆலங்குளம் வழியாக கீழக்கண்டனி வரை 10.6 கி.மீ., துாரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் அறிவித்தனர். தற்போது சூரக்குளம், பையூர், ஆலங்குளம், கீழக்கண்டனியில் அரசு நிலம் எடுக்கப்பட்டது போக, எஞ்சிய தனியார் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளனர்.
எட்டு ஆண்டு கடந்த திட்டம்
புறவழிச்சாலை அமைக்கும் பணியில் 10.6 கி.மீ., துார இடைவெளியில் சூரக்குளம், கீழக்கண்டனி ரயில்வே கேட் மேல் மேம்பாலம், கால்வாய், பாசன கால்வாய் உள்ள 10 இடங்களில் 12 மீ., அகலத்திற்கு பாலம் கட்டப்பட உள்ளது. திட்டம் அறிவித்து 8 ஆண்டுகளை கடந்தபோதும், புறவழிச்சாலை கட்டுமான பணி கிடப்பிலேயே உள்ளது. முதல்வர் பழனிசாமி தனி கவனம் எடுத்து புறவழிச்சாலை கட்டுமான பணியை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3 மாதத்தில் பணி துவங்கும்
மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டபொறியாளர் மாரியப்பன் கூறியதாவது, தற்போது தனியார் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் தமிழக அரசு நிதி ஒப்புதல் வழங்கி, ஒதுக்கீடு செய்துவிடும். இன்னும் 3 மாதத்திற்குள் புறவழிச்சாலை கட்டுமான பணி துவக்கப்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE