சென்னை : தென் மாவட்டங்களை மிரட்டிய, 'புரெவி' புயல் கரையைக் கடக்கும் முன்னரே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக நேற்று மாலை வலுவிழந்தது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல், இலங்கையின் திரிகோணமலை அருகே, நேற்று முன்தினம் இரவில் கரையைக் கடந்தது. இது, நேற்று மாலை இலங்கையைக் கடந்து, மன்னார் வளைகுடா வழியாக பாம்பனை நெருங்கியது. அப்போது, இந்தப் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திடீரென வலுவிழந்தது. இன்று அதிகாலை, ராமநாதபுரம் - துாத்துக்குடி இடையே கரையைக் கடக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
உள்ளது. இதன் காரணமாக, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில், இன்று கன முதல் மிக கன மழை வரை பெய்யலாம். அதேபோல, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், கன மழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திருச்சி, விருதுநகர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும், கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், வானிலை மையம் கூறியுள்ளது. வேதாரண்யத்தில் 20 செ.மீ.,'புரெவி' புயலால், தென் மாவட்டங்களில் குறிப்பாக, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், நேற்று மிக கன மழை கொட்டும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
ஆனால், சென்னை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை மட்டுமே, நேற்று முன்தினம் இரவு முதல் மழை கொட்டியது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், நாகை மாவட்டம், வேதாரண்யத்தில், 20 செ.மீ., மழை பெய்துள்ளது.
காரைக்கால், 16; தலைஞாயிறு, திருப்பூண்டி, 15; நாகை, 14; திருத்துறைப்பூண்டி, 13; மயிலாடுதுறை, ராமேஸ்வரம், 12; முதுகுளத்துார், 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சீர்காழி, குடவாசல், அதிராம்பட்டினம், மஞ்சளாறு, 10; திருவாரூர், ஆடுதுறை, தாம்பரம், பட்டுக்கோட்டை, 9; நன்னிலம், மரக்காணம், பாம்பன், திருவிடைமருதுார், திருக்கழுகுன்றம், புதுச்சேரி, வலங்கைமான், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னை நகரில், 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
6 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை
'புரெவி' புயல் வலுவிழந்திருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களுக்கு, இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக, ஜனவரி மாதம், ஒரு சனிக்கிழமை, அரசு அலுவலகங்கள் செயல்படும்.கன மழை பெய்யலாம் என்பதால், இம்மாவட்டங்களில், அத்தியாவசிய பணிகள் தவிர, பிற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என, அரசு தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE