தமிழ்நாடு

சுருங்கியது வைகை

Added : டிச 03, 2020
Share
Advertisement
சிவகங்கை : வைகை ஆற்றில் நீர் வரத்து சுருங்கியதாலும்,பல்வேறு அணைகள் கட்டி நீர் வரத்தை குறைத்ததாலும், பூர்வீக பாசன பகுதிகளான சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்ட விளை நிலங்கள் பாலை வனங்களாக மாறிவிட்டன. இப்பகுதி பாசன நிலங்களுக்கு நீர் வரத்தை உறுதி செய்ய அரசு நிலையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் பழனிசாமி வைகை பூர்வீக பாசன பகுதி

சிவகங்கை : வைகை ஆற்றில் நீர் வரத்து சுருங்கியதாலும்,பல்வேறு அணைகள் கட்டி நீர் வரத்தை குறைத்ததாலும், பூர்வீக பாசன பகுதிகளான சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்ட விளை நிலங்கள் பாலை வனங்களாக மாறிவிட்டன. இப்பகுதி பாசன நிலங்களுக்கு நீர் வரத்தை உறுதி செய்ய அரசு நிலையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

முதல்வர் பழனிசாமி வைகை பூர்வீக பாசன பகுதி நிலங்களை விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுப்பாரா...மூல வைகையாறுவைகை நீர் உற்பத்தி பகுதிகளான வருஷநாடு மலையில் உள்ள வெள்ளிமலை, மேகமலை, பச்சைகூமாட்சிமலை, ராயப்பன்பட்டி வழியாக வரும் வரட்டாறு,சுருளி அருவியில் இருந்து வரும் நீர் வரத்து, வைரவனாறு, போடி மலைப்பகுதியில் இருந்து வரும் கொட்டகுடி ஆறு, பெரியகுளம் பகுதியில் குடமுருட்டியாறு, பாம்பாற்று ஓடைகள், சோத்துப்பாறை ஓடை, மஞ்சளாறு நீர்வரத்து, உசிலம்பட்டி அருகேயுள்ள மாவூற்று ஓடை, ஜோதிபுரம் ஓடை, ஜம்புலிபுத்துார் ஓடை, தெப்பம்பட்டி ஓடை, மதுரையில் சாத்தியா ஓடை, கொண்டமாரி ஓடை, மானாமதுரையில் உள்ள உப்பாறு என வைகை ஆற்றில் கரைபுரண்டு வெள்ளமாக வெளியேறும்

வைகை ஆறு 258 கி.மீ., துாரம் பயணம் செய்து ராமநாதபுரம் மாவட்டம் வரை பாசன வசதி பெற்றது. அதன் உபரி நீர் வங்க கடலிலும் கலந்து வந்தது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பயன் பெற்று வந்தனர்.

பேரணையால் பாதிப்பு

1908 ல் வைகை ஆற்றின் குறுக்கே பேரணை என்ற தடுப்பணை ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. இங்கிருந்து பாசனப்பகுதிகளுக்கு பாசன நீர் பிரித்து வழங்க அமைக்கப்பட்டது. மானாமதுரை பகுதியில் குத்தகை நிலங்களில் விவசாயம் செய்த ஆங்கிலேயர் பீசர் பீட்டர் பேரணையால் மானாமதுரை பகுதி விவசாய நிலங்கள் பாலைவனங்களாக மாறும் என லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது கோர்ட் மானாமதுரை பாசனப்பகுதிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என ஆங்கிலேய அரசு அளித்த உறுதியின் பேரில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

அதன் பின்பும் பேரணையிலிருந்து பாசன பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. வைகை அணையால் பாதிப்புபெரியாறு பாசனப்பகுதிகளுக்காக,வைகை ஆற்று நீரை இணைத்து தேக்குவதற்காக அப்போதைய முதல்வர் காமராஜர் வைகை அணையை கட்டினார். அப்போது ராமநாதபுரம் சேதுபதி மன்னர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.

வைகை அணையை எதிர்த்து சட்டசபையில் வெட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வரும்,ராமநாதபுரம் மன்னர் சேதுபதியும் பூர்வீக பாசனப்பகுதிகளுக்கு உரிய நீரை பெற்று தருவோம் அதில் எந்த மாற்றமும் ஏற்படாது என்ற உத்திரவாதம் வாய் மொழியால் வழங்கப்பட்டது.இதனை விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர்.

நீர் வரத்து சுருங்கியது

1965ல் மதுரை பாலமேடு பகுதியில் சாத்தியா ஓடையில் அணை கட்டி நீர் தேக்கப்பட்டு பாசன விரிவாக்கம் செய்யப்பட்டது. 1967 ல் மஞ்சளாறு அணை,1979ல் மருதா நதி அணை,1997 ல் வரட்டாற்றில் சண்முகாநதி அணை பெரியகுளத்தில் சோத்துப்பாறை அணை, மானாமதுரை அருகே உப்பாற்றில் செய்களத்துார் அணை கட்டி புதிய பாசன பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றுக்கு பூர்வீகமாக வந்த நீர் வரத்து முழுவதும் அணைகள் கட்டியதால் நீர் வரத்து சுருங்கியதாக விவசாயிகள் கூறுகின்றனர்.உத்திரவாதம் வழங்கப்படவில்லைவைகை அணை கட்டிய பின்னர் முல்லை பெரியாறு பாசன பகுதியாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வைகை நீர்வரத்து அனைத்தும் முல்லை பெரியாறு பாசனத்திற்காக வழங்கப்பட்டது.

வைகை ஆற்றின் நீர் வரத்து பகுதியான வருஷநாடு மலைப்பகுதியும்,கொட்டகுடி ஆறு மட்டுமே வைகை பாசனப்பகுதிக்கான நீர் வரத்தாக மாறியது. இதன் காரணமாக பூர்வீக பாசன பகுதிகளான சிவகங்கை,ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாசன பரப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டன. வைகை அணை கட்டும் போது வழங்கப்பட்ட உத்திரவாதம் அரசின் உத்தரவாக வழங்கப்படவில்லை.

கூட்டு குடிநீர் திட்டங்களால் பாதிப்பு

வைகை அணையின் கீழ்ப்பகுதியில் இன்று வரை 125க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களுக்காக பாசன நீர் பங்கு போடப்பட்டன. மதுரை,சேடபட்டி,போன்ற குடிநீர் திட்டங்கள் காரணமாக வைகையின் பூர்வீக பாசன பகுதி முற்றிலும் பாதிக்கப் பட்டது.வைகை ஆற்றில் அணைகள் கட்டியும், நீர் வரத்துப்பகுதி சுருங்கியும்,கூட்டுக்குடிநீர் திட்டங்களையும் இன்று வரை பூர்வீக பாசன விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். இதன் விளைவாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பாசனத்தை நம்பியிருந்த நிலங்கள் பாலைவனங்களாக மாறி இன்று சீமைக்கருவேல மர புதர்களாக மாறியுள்ளன.

நகரமயமாக்கல் பாசன பரப்பு சுருங்கவில்லை

வைகை ஆற்றங்கரையோரப்பகுதிகளில் இருந்த பாசன நிலங்கள் நகர்மயமாதல் காரணமாக பாசன பரப்பு பெரிய அளவில் குறையவில்லை. ஒரு போகத்திற்கு உத்தரவாதம்மூல வைகையாறு மூலம் பாசனம் பெற்று வந்த பூர்வீக பாசன பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை பகுதிகளில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 108 ஏக்கர் 374 கண்மாய்கள் மூலம் பாசனம் பெற்று வந்தது. தற்போது வைகை ஆறு வறண்டு சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகள் பாலைவனமாக மாறிவிட்டன. அரசு இப்பகுதி விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் தர உரிய உத்திரவாதத்தை அரசு வழங்க வேண்டும்.

ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் செப்., 15 ல் முல்லை பெரியாறு, வைகை அணையில் உள்ள நீரை கணக்கில் கொண்டு தண்ணீர் திறந்து முன்னுரிமை வழங்க வேண்டும்.எல்.ஆதிமூலம், திருப்புவனம்

காலம் தவறி தண்ணீர் திறப்பு

பூர்வீக பாசன பகுதியில் பூவந்தியில் 1200 ஏக்கர் பாசனம் பெற்று வந்தது. 20 ஆண்டுகளாக முறையாக எங்கள் பகுதிக்கு வைகை நீர் வழங்கப் படவில்லை.இது தவிர மடப்புரம், கணக்கன்குடி, ஏனாதி என 2 ஆயிரம் ஏக்கர் வரை பாசனமின்றி விளை நிலங்கள் சீமைக்கருவேல புதர்களாக மாறிவிட்டன. முல்லை பெரியாறு, வைகை பாசன பகுதியில் முதல்போகம் விளைவித்த பின்னர் இரண்டாம் போகத்தில் எங்களுக்கு முன்னுரிமை வழங்கி செப்., 15 ல் தண்ணீர் திறக்க வேண்டும். பருவம் தவறிய பின் அக்., நவ., மாதங்களில் தான் பாசனத்திற்கு நீர் வழங்குவதால் எங்களால் ஒரு போகம் கூட விளைவிக்க முடியவில்லை, என்றார்.வே.விஜயகிருஷ்ணன், பூவந்தி

பாசனத்திற்கு உரிமையில்லை

இன்று வரை பூர்வீக பாசன பகுதிகளுக்கு என எந்த அரசு உத்தரவும் வழங்கப்படவில்லை. வைகை பாசனத்தில் நீட்டிப்பு கால்வாய்கள் உருவாக்கி புதிய பாசனப்பகுதிகளை உருவாக்கி விட்டனர். திருமங்கலம், நிலையூர் கால்வாய்களில் ஆயிரக்கணக்கான புதிய பாசன பகுதிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வைகை நீர் தடுக்கப்பட்டுள்ளது. மழைகாலங்களில் நுங்கும், நுரையுமாக வந்த வைகை ஆறு இன்று வறண்டு பாலை வனமாக மாறிவிட்டது. வைகை ஆற்றில் மட்டும் குடிநீருக்காக 45 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாசனத்திற்கு என எந்த உரிமையும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை, எஸ்.செல்வம், திருப்புவனம்

மணல் கொள்ளையால் பாதிப்பு

பூர்வீக பாசன பகுதிகளான 2, 3 ம் பகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இதற்கு எங்களுக்கு 9 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படும். வைகையில் இருந்து எங்களுக்கு தண்ணீர் கிடைப்பதே அரிது. அப்படியே வழங்கினாலும் 3 முதல் 4 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே வழங்குகின்றனர். சீமைக்கருவேல மரங்களை அகற்றி, துார் வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். வரத்துக்கால்வாயில் மணல் கொள்ளை நடப்பதால் கண்மாய்களுக்கு நீர் வரத்து பாதிக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு போகம் விளைவிக்க அக்டோபரில் நீர் திறந்தாலும் குறுகிய கால பயிர்களை விளைவித்து விடுவோம்.மலைச்சாமி, மணலுார்

பெரியாறு கால்வாயை நிரந்தரமாக்குவாரா முதல்வர்

முல்லைப்பெரியாறு அணை 136 அடியாக இருந்த போது சிங்கம்புணரி, திருப்புத்துார் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 7 வது பிரிவு கால்வாய் கட்டப்பட்டது. மதுரை மாவட்டத்தில் மண் கால்வாய்களை சிமென்ட் கால்வாய்களாக மாற்றியதன் மூலம் மீதமாகும் தண்ணீரை இப்பகுதிக்கு வழங்கும் பொருட்டே இக்கால்வாய் கட்டப்பட்டது. குறிப்பிட்ட உயரம் நீர் இருப்பு இருந்தால் தான் தண்ணீர் என்ற விதிகள் ஏதும் இப்பகுதிக்கு கிடையாது. மேலும் சில ஆண்டுகளில் இக்கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்றி ஆண்டுதோறும் தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரிலேயே கால்வாய் கட்ட விவசாயிகள் இடம் அளித்தனர்.

தற்போது 146 அடியை தாண்டி 152 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. இருந்தாலும் இப்பகுதிக்கான தண்ணீர் முறையாக திறக்கப்படுவதில்லை. எனவே இப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யவும், பெரியாறு கால்வாயில் இப்பகுதி விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டவும் 7 வது பிரிவு கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராம.அருணகிரி திருப்புத்துார் முன்னாள் எம்.எல்.ஏ.,

பூர்வீக பாசன பகுதிக்கு தேவைப்படும் நீர்பாசன பகுதி 1வலது கால்வாய் தேனுார், திருவேடகம், உமையநல்லுார், பேரணை முதல் விரகனுார் மதகணை வரையிலான பகுதி, இடது கால்வாய் பகுதி தென்கரை, நிலையூர், கொடிமங்கலம், மாடக்குளம், கீழமாத்துார்,துவரிமான், கொந்தகை, அச்சம்பத்து, அவனியாபுரம், சிந்தாமணி, அனுப்பானடி, பனையூர், சொட்டதட்டி, விரகனுார் ஆகிய பகுதிகள் 46 கண்மாய்கள், 1744.80 மில்லியன் கன அடி நீர் தேக்கப்பட்டு 27, 528 ஏக்கர் பாசன பரப்பு பயன் பெற்று வருகிறது.

பாசன பகுதி 2விரகனுார் மதகணை முதல் பார்த்திபனுார் மதகணை வரை வலது கால்வாய் சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்துார், சக்குடி, அங்காடிமங்கலம், பூவந்தி, அதிகரை, மடப்புரம், கணக்கன்குடி, கானுார், பொத்தானேந்தல், திருமாஞ்சோலை, 18ம் கோட்டை, இடைக்காட்டூர், கரிசல்குளம், வண்ணக்குளம், இடது கால்வாய் புளியங்குளம், மணலுார், திருப்புவனம், பிரம்மனுார், பழையனுார், லாடனேந்தல், கொத்தன்குளம், மாரநாடு, திருப்பாச்சேத்தி, மழவை, வாகுடி, சம்பிராயனேந்தல், கட்டிக்குளம், அல்லியேந்தல், முத்தனேந்தல், இருக்காக்கோட்டை, கீழ மேல்குடி, கால்பிரவு, மானாமதுரை, பசலை, பார்த்திபனுார். 87 கண்மாய்கள் மூலம் 2,912 மில்லியன் கனஅடி நீர் தேக்கப்பட்டு 40,724. 83 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது.

பாசன பகுதி 3பார்த்திபனுார் மதகணை முதல் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை வலது கால்வாய் மூலம் வயிரவநத்தம், நெட்டூர், பிராமணகுறிச்சி முனைவென்றி, மேலாயூர், சாலைக்கிராமம், கச்சாத்தநல்லுார், வலையனேந்தல், எமனேஸ்வரம். இடது கால்வாய் மூலம் நாட்டார்கீழாய்குடி, வல்லம், பகைவென்றி, அக்கிரமேசி, நாகாச்சி, காவலுார், அருகுளம், பெருங்கரை, கூத்தன்கால்காட்டு, பரமக்குடி, வேயந்தோனி, நெம்மேனி, மஞ்சூர், பொட்டிதட்டி, களரி, வலசை, காமன்கோட்டை, ராமநாதபுரம், காருகுடி, முதலுார், சூரியதேவன் வரை 241 கண்மாய்கள் மூலம் 6977.54 மில்லியன் கன அடி மூலம் 67,837 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது.

மொத்த பாசன பகுதி 374 கண்மாய்கள் மூலம் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 108 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதில் முதல் பகுதிக்கு 2 பங்கு நீரும், இரண்டாம் பகுதிக்கு 3 பங்கு நீரும், 3ம் பகுதிக்கு 7 பங்கு நீரும் சேர்த்து மொத்தமாக 11,634.66 மில்லியன் கன அடி நீர் (11.5 டி.எம்.சி) தேவைப்படுகிறது.குடிநீருக்கு அனுமதிக்கப்பட்ட அளவுவைகை ஆற்றுப்பகுதியில் 125 க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, ஊராட்சி என பல கோடி பேர் வைகை ஆற்றின் குடி நீரை நம்பியே உள்ளனர். குடிநீருக்காக ஆண்டுக்கு 2,362 கன அடிக்கு மேல் எடுக்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதியதாக மதுரை ஸ்மார்ட் சிட்டிக்கு 25 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படஉள்ளது. இவர்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 125 கன அடி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.அரசு என்ன செய்ய வேண்டும்முல்லை பெரியாறு, வைகை பாசன பகுதிகளை வல்லுனர்கள் குழுக்கள் அமைத்து இரு அணைகளையும் ஆய்வு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட நீர் வரத்து குறித்து முழுமையாக கண்டறிந்து வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு ஒரு போகம் விளைவிக்கும் வகையில் பாசன நீர் வழங்க புதிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அனைத்து விவசாயிகளையும் சம நிலையில் பார்க்க வேண்டும் என்பதே சிவகங்கை, ராமநாதபுரம் வைகை பாசன விவசாயிகளின் ஏக்கமாகும்.

முன்னுரிமை வழங்க வேண்டும்

முல்லை பெரியாறு பாசன பகுதிகளான கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தென் மேற்கு பருவமழையில் பயன் பெறுகின்றனர். கேரள மாநிலத்தில் பெய்யும் மழையால் முதல் போகம் நெல் விளைவித்து விடுகின்றனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் பருவமழை பெய்து ஓரளவுக்கு கண்மாயில் நீர் வரத்து இருக்கும். இந்த நேரத்தில் வைகை அணையில் இருந்து பூர்வீக பாசன பகுதிகளுக்கு பாசன நீர் வழங்கிய பின்னரே மற்ற பகுதிகளுக்கு நீர் வழங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X