மதுரவாயல்:சினிமா பாணியில், சி.பி.ஐ., அதிகாரிகள் போல் நடித்து, பல் மருத்துவ கல்லுாரி உரிமையாளர்கள் வீட்டில் புகுந்து மிரட்டிய, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
மதுரவாயல், கிருஷ்ணா நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் ராகேஷ், 40. இவர், ஆலப்பாக்கத்தில், பல் மருத்துவக் கல்லுாரி நடத்துகிறார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, ஏழு பேர் கும்பல்,தானா சேர்ந்த கூட்டம்படப்பாணியில், சி.பி.ஐ.,அதிகாரிகள் என, அடையாள அட்டையை காட்டி, அவரது வீட்டிற்குள் நுழைந்தனர்.
வீட்டில் இருந்தோரை வெளியேற்றி, சிலை கடத்தல் வழக்கில், ராகேஷிற்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்தனர்.பின், அவரை அறையில் அடைத்து வைத்து, அவர் மீது பதியப்பட்ட வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க, 10 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர்.இதில், சந்தேகமடைந்த ராகேஷ், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து, ரோந்து பணியில் இருந்தபோலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த கும்பலில், ஐந்து பேரை மடக்கி பிடித்தனர்.இருவர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்டவர்களை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில்,குன்றத்துாரைச் சேர்ந்த நரேந்திர நாத், 40, யோவான், 41, அனகாபுத்துாரைச் சேர்ந்த ஸ்டாலின், 40, மதுரவாயலைச் சேர்ந்த ராமசுப்ரமணியன், 43, ஆவடியைச் சேர்ந்த சங்கர், 41, என தெரிய வந்தது.இதில், ராமசுப்ரமணியன், ராகேஷிற்கு பழக்கமானவர் என, தெரியவந்துள்ளது. இது குறித்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE