மதுரை:ஆண்டுதோறும் இருமுறை கப்பல் படையில் சேர தமிழகத்திற்கு அதிகபட்சம் 100 இடங்கள் ஒதுக்கினாலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் இந்த இடங்கள் நிரம்புவது இல்லை. இதனால் பிற மாநிலங்களுக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய அளவில் கப்பல் படையில் பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் சேர்க்கை ஆண்டுதோறும் நடக்கிறது. இதற்கு அடிப்படை கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு. இதில் தேர்ச்சி பெற்றாலே போதும். இதேபோல் பிளஸ் 2, பட்டப்படிப்பு என கல்வித்தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைக்கிறது. 'இசைக்கருவிகளை இசைக்க தெரிந்தால்கூட வேலை உண்டு' என்கிறார் மதுரை இரண்டாம் அணி கப்பல் படை கமாண்டர் வி.பி. செந்தில்.
நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: கப்பல் படையில் சேர அடிப்படை கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு. பிளஸ் 2வில் இயற்பியல், கணிதம் படித்தவர்கள் சீனியர் செகண்டரி ரெக்ரூமென்ட் பிரிவில் மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளத்திற்கு சேரலாம். 70 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் ஆர்ட்டிபிக்சர் அப்பரன்ட்டிஸாக சேர்ந்து 15 ஆண்டுகளில் 5 பதவி உயர்வுகளை அடுத்தடுத்து பெற முடியும்.
விளையாட்டு பிரிவுகளில் மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் சாதனை படைத்திருந்தால் எழுத்துத்தேர்வின்றி மருத்துவ பரிசோதனை மூலம் கப்பல் படையில் வீரராக சேரலாம். இசைக்கருவிகளில் ஒன்றை இசைக்க தெரிந்தால் அதற்கான பிரிவில் எழுத்துத்தேர்வின்றி சேரலாம்.ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கப்பல் படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான அறிவிப்பு அரசின் வேலைவாய்ப்பு நாளிதழ் மற்றும் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
இணையதளத்தில் ஒருமுறை தங்கள் விபரங்களை பதிவிட்டால் அடுத்தடுத்து ஆட்கள் தேர்வு செய்யப்படும்போது கல்வித்தகுதிக்கேற்ப சம்பந்தப்பட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE