உடுமலை:உடுமலை அருகே, கூட்டுக்குடிநீர் திட்டத்தில், சீராக குடிநீர் வினியோகிக்க, கிராம பெண்கள், அமைச்சர், கலெக்டரிடம், புகார் தெரிவித்ததையடுத்து, ஒன்றிய அதிகாரிகள், நேரடி ஆய்வு செய்தனர்.குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையத்துக்குட்பட்ட அடிவள்ளி கிராமத்தில், இணைப்பு ரோடு பணிகளை துவக்க, பூமி பூஜை நேற்று காலை நடந்தது. இதற்காக, கிராமத்துக்கு, வந்த கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் உட்பட அதிகாரிகள் குழுவினர் வந்திருந்தனர்.அப்போது, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களிடம், குறைகளை கேட்டறிந்தனர். அப்போது, பெண்கள், அடிவள்ளி கிராமத்துக்கு, திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், முறையாக குடிநீர் வினியோகிக்கப்பதில்லை.இதனால், குடிப்பதற்கு லாயக்கற்ற, போர்வெல் தண்ணீரை, குடிநீராக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த தண்ணீரால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. கூட்டுக்குடிநீர் திட்டத்தில், போதுமான அளவு, சீராக குடிநீர் வினியோகிக்க, வேண்டும் என புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, அமைச்சர், கலெக்டர் ஆகியோர், ஊராட்சித்தலைவர் உட்பட நிர்வாகிகளிடம், பிரச்னை குறித்து கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க ஒன்றிய அதிகாரிகளுக்கும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டனர். பின்னர், அதிகாரிகள் குழுவினர், கிராமத்தில், ஆய்வு நடத்தி, விரைவில், குடிநீர் வினியோகத்தை சீரமைப்பதாக உறுதியளித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE