கோவை;செட்டிபாளையம் அருகே, 18 ஏக்கர் பரப்புள்ள காடுகுட்டையில், சுத்திகரித்த கழிவு நீரை தேக்க, ரூ.4.76 கோடிக்கு பொதுப்பணித்துறை திட்டம் தயாரித்துள்ளது. இப்பணியை, அடுத்த வாரம் துவக்கி, ஜனவரிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.செட்டிபாளையம் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகள், வறண்டு காணப்படுகின்றன. 1,200 அடிக்கு ஆழ்துளை கிணறு அமைத்தாலும், தண்ணீர் வருவதில்லை.
விவசாயம் செய்ய முடியாமல் தவித்த விவசாயிகள், சுத்திகரித்த கழிவுநீரை கொண்டு, குளம், குட்டைகளை நிரப்பலாம் என, பொதுப்பணித்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.அமைச்சர் வேலுமணி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், சாத்தியக்கூறுகளை ஆராய அறிவுறுத்தினார். ஒண்டிப்புதுார் சுத்திகரிப்பு நிலையத்தில், நாளொன்றுக்கு, 6 கோடி லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கலாம்.தற்போது, 50 லட்சம் முதல், ஒரு கோடி லிட்டரே சுத்திகரிக்கப்பட்டு, நொய்யல் ஆற்றில் விடப்படுகிறது. அப்பகுதியில் வீடுகளில் வெளியேற்றும் கழிவுநீரும் இணைவதால், ஆற்றில் கழிவு நீரே பயணிக்கிறது.
அதனால், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, 'பம்ப்' செய்து, குழாய் மூலமாக, காடுகுட்டைக்கு கொண்டு செல்லலாம் என, பொதுப்பணித்துறை முடிவு செய்தது.ரூ.4.76 கோடிக்கு திட்ட வரைவு தயாரித்து, ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் முன்னிலையில், அடுத்த வாரம் பூமி பூஜை நடத்தி, வேலையை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:செட்டிபாளையம் அருகே உள்ள காடுகுட்டை, 18 ஏக்கர் பரப்பு கொண்டது. வறட்சியாக இருப்பதால், சுற்றுவட்டாரத்தில் விவசாயம் பாதிக்கிறது.ஒண்டிப்புதுார் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பட்டணம் வழியாக, 5 கி.மீ., துாரத்துக்கு இரும்பு குழாய் பதித்து, தினமும், 50 லட்சம் லிட்டர் சுத்திகரித்த கழிவு நீரை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக, சுத்திகரிப்பு நிலையம் அருகே, 'பம்ப் ஹவுஸ்' கட்டப்படும்; 125 எச்.பி., திறனுள்ள மோட்டார் பொருத்தி, பம்ப் செய்து, சுத்திகரித்த கழிவு நீர் எடுத்துச் செல்லப்படும்; 15 நாட்களில், காடுகுட்டை நிரம்பி விடும்.அதன்பின், செட்டிபாளையம் குளத்துக்கு நீர் வழிப்பாதையாக கொண்டு செல்லவும், கோதாவாடி குளத்துக்கு இணைப்பு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு நீர் நிலையாக நிரப்பப்படும்.காடுகுட்டையில் தண்ணீர் தேக்கினால், 400 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்; மீண்டும் விவசாயம் செழிக்கும்; நிலத்தடி நீர் மட்டம் உயரும். அடுத்த வாரம் வேலையை துவக்கி, ஜனவரிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE